×

கியூபா அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டங்கள்!: டிச. 31 வரை உணவு, மருந்துக்கு வரிவிலக்கு என அறிவிப்பு

கியூபா: கியூபாவில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வரும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கான வரிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கியூபாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவாக போராட்டங்கள் வெடித்துள்ளன. கொரோனா பரவல், பொருளாதார சரிவு ஆகியவற்றில் அரசு தோல்வியடைந்துவிட்டதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். கொரோனா முதல் அலையில் தன்னை காத்துகொண்ட கியூபா, இரண்டாவது அலையின் தாக்கத்தால் சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் நாள் ஒன்றுக்கு 5,000 பேர் பாதிக்கப்படுவதும் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதும் அந்நாட்டு அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. கியூபாவின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத்துறை கொரோனா பரவலாலும், போராட்டத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு கூட தட்டுப்பாடு நிலவுவதாகவும் அவர்கள் புகார் கூறுகின்றனர். இதற்காகவே காத்துக்கொண்டிருந்த அமெரிக்கா, கியூபாவில் எழுந்துள்ள போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ளது.

கியூபாவின் புரட்சியின் வழியாக கிட்டல் கேஸ்ட்ரோ ஆட்சி பிடித்தது முதலே, பொருளாதார தடைகளை போட்டு அமெரிக்கா முடுக்கி வருகிறது. ஒபாமா காலத்தில் உறவை ஏற்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் பின்னால் வந்த டிரம்ப், கியூபா மீதான பிடியை மேலும் இறுக்கினார். அதன் தொடர்ச்சியாகவே தற்போது பைடனின் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. கியூபாவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்காவின் பொருளாதார தடைகளே காரணம் என குற்றம்சாட்டியுள்ள கியூபா அதிபர், போராட்டங்கள் அமெரிக்காவால் தூண்டிவிடப்படுவதாக சாடியுள்ளார்.

கியூபாவுக்கு எதிரான போராட்டங்களை கண்டித்து கியூபா புரட்சி ஆதரவாளர்கள் போராட வேண்டும் என்றும்  கியூபா அதிபர் அழைப்பு விடுத்தார். தொடர்ந்து, கியூப வீதிகளை அரசின் ஆதரவாளர்கள் ஆக்கிரமித்தனர். இருதரப்பு போராட்டங்கள் கியூபாவை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. இதையடுத்து தற்காலிக நடவடிக்கையாக டிசம்பர் மாதம் வரை வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கான வரிகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 


Tags : Cuba, the struggle, food, medicine, tax exemption
× RELATED தெற்கு காசாவில் உள்ள ரபாவின் சில...