×

ஆப்கானிஸ்தான் விவகாரம் வன்முறையால் ஆட்சியை பறிப்பதை உலகம் ஏற்காது: ஷாங்காய் மாநாட்டில் ஜெய்சங்கர் பேச்சு

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில்  இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், தலிபான்கள் கை ஓங்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் பெரும்பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு  வந்துள்ளனர்.  இந்நிலையில் தஜிகிஸ்தான் தலைநகர் துசான்பேவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சகர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசுகையில், ‘‘ஆப்கானிஸ்தானில் உள்ள மக்களின் எதிர்காலமானது கடந்த காலத்தில் இருந்ததைபோலவே இருக்கக்கூடாது. வன்முறை மற்றும் வலுகட்டாயமாக ஆட்சியை பறிக்கும் நடவடிக்கைக்கு இந்த உலகம் எதிரானது. காபூலின் அண்டை நாடுகள் தீவிரவாதம், பிரிவினை மற்றும் உச்சபட்ச தீவிரவாதத்தால் அச்சுறுத்தப்படவில்லை என்பதை உறுதி  செய்வது அவசியமாகும்’’ என்றார். சீனா வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ அளித்த பேட்டியில், ‘‘ஆப்கானிஸ்தானில்  போர் மேலும் பரவுவதற்கு தலிபான்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றார்.

மாநாட்டின் ஒருபகுதியாக அமைச்சர் ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ சந்திப்பு நேற்று நடந்தது. இதில், எல்லைப் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுத்து, சுமூக உறவு ஏற்பட வழிவகுப்பதென இரு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

Tags : Afghanistan ,Jaisankar ,Shanghai Conference , Afghanistan, Violence, World, Shanghai, Jaisankar
× RELATED வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள்...