×

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான வழக்குகள்.. உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ஒன்றிய அரசு மனு

சென்னை: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி ஒன்றிய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து முகநூல், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், சுட்டுரை உள்ளிட்ட சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் விதிகள் கொண்டு வந்தது.

இந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சுய ஒழுங்குமுறை நடைமுறையில் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்படும் செய்திகளை, சம்பந்தப்பட்ட வெளியீட்டாளரின் விளக்கம் கேட்காமல் முடக்கம் செய்ய தகவல் தொழில்நுட்ப துறை செயலாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த புதிய விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில், கர்நாடக இசை கலைஞரான டி.எம்.கிருஷ்ணா மனு தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து புதிய விதிகளை எதிர்த்து, டிஜிட்டல் நியூஸ் வெளியீட்டாளர்கள் சங்கம் மற்றும் பத்திரிகையாளர் முகுந்த் பத்மநாபன், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், புதிய விதிகளால், எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது. எனவே சில விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரணை இன்று உயர்நீதிமன்றத்துக்கு வந்தது அப்போது ஒன்றிய அரசு சார்ர்பில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு எதிரான வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தது.

மேலும் உயர்நீதிமன்றத்தின் இந்த வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : United States Government ,Supreme Court , Cases against new IT rules .. Petition of the United States Government to transfer to the Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...