×

தொற்று வெகுவாக குறைந்து வருவதால் சென்னையில் விமானங்கள், பயணிகள் அதிகரிப்பு

மீனம்பாக்கம்: தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. மே 21ம் தேதி அதிப்பட்ச பாதிப்பாக 36,184 என இருந்தது. அரசு எடுத்த தீவிர நடவடிக்கைகள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போன்ற கடுமையான கட்டுப்பாடுகளாலும், தடுப்பூசிகள் போடுவதை தீவிரப்படுத்தியதாலும் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பெருமளவு குறைந்து விட்டது. தமிழகத்தில் 31 மாவட்டங்களில் பாதிப்பு 100க்கும் குறைவாகவே உள்ளது. நோயில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களிடையே வைரஸ் பீதி பெருமளவு குறைந்து சகஜநிலைக்க வேகமாக திரும்பி வருகிறது.

இந்நிலையில் தொற்றால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் வெகுவாக குறைந்து, விமான சேவைகளும் பெருமளவு குறைந்திருந்தன. நாளொன்றுக்கு 60ல் இருந்து 70 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன. 2 ஆயிரத்தில் இருந்து, 3 ஆயிரம் பயணிகள் மட்டுமே பயணித்தனர். இதனால் போதிய பயணிகள் இல்லாமல், தினமும் 90 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் தொற்று குறைய தொடங்கியதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மே கடைசி வாரத்தில் புறப்பாடு விமானங்கள் 40, வருகை விமானங்கள் 40 என மொத்தம் 80 விமானங்கள் இயக்கப்பட்டு, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இம்மாத முதல் வாரத்தில் இருந்து அதிகரித்துள்ளது. தற்போது நாளொன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயணிக்கின்றனர். வருகை விமானங்கள் 69 ஆகவும், புறப்பாடு விமானங்கள் 67 ஆகவும் என மொத்தம் 136 விமானங்களில் 15,800க்கும் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனர்.

அதேபோல டெல்லி, பெங்களூர், ஐதராபாத், மும்பை ஆகிய பெருநகரங்களுக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் வட மாநிலங்களுக்கான விமானங்களில் அதிகமான பயணிகள் கூட்டமிருப்பதால், அதிக இருக்கைகளுடன் பெரிய விமானங்கள் இயக்கப்படுகின்றன. இது சென்னை விமான நிலைய வட்டாரத்தில் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தொற்று விரைவில் முற்றிலுமாக  குறைந்து, ஊரடங்கு தளர்வுகளை அரசு மேலும் அதிகரித்ததும், சென்னை விமான நிலையம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Chennai , Chennai, flights, passengers, increase
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...