×

அதிமுக ஆட்சியில் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கண்மாயில் அரைகுறையாக நடந்த குடிமராமத்து பணி-தூர்வாராததால் மழைநீரை சேமிப்பதில் சிக்கல்

கம்பம் : அதிமுக ஆட்சியில் கேசவபுரம் கண்மாய் குடிமராமத்து பணிக்காக ரூ.40  லட்சம் ஒதுக்கியும், முறையாக பணிகள் நடைபெறவில்லை எனவும், தூர்வாராததால்  மழைநீரை சேமிக்க முடியவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தேனி  மாவட்டம், கம்பம் அருகே, நாராயணத்தேவன்பட்டி ஊராட்சிக்கும் கே.கே.பட்டி  பேரூராட்சிக்கும் இடையே 103.81 ஏக்கர் பரப்பளவில் கேசவபுரம் கண்மாய்  அமைந்துள்ளது. இக்கண்மாய் பொதுப்பணித்துறை மஞ்சளாறு வடிநிலக்கோட்ட  கட்டுப்பாட்டில் உள்ளது.

மேகமலை வனப்பகுதியில் மழை பெய்யும்போது,  யானைக்கஜம் ஓடை வழியாக வரும் மழைநீர் இந்த கண்மாய்க்கு வரும். இது  நிரம்பினால் சுற்றுப்புற கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்ந்து,  நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை, திராட்சை விவசாயம் நடக்கும். இந்நிலையில்,  கண்மாய் நீர்தேக்கப் பகுதிகளை சிலர் ஆக்கிரமித்ததால், மழை காலங்களில் நீரை  சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 செப்டம்பர் அதிமுக  ஆட்சியில் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ், ரூ.40 லட்சம்  ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்மாயை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல், மடை  எண்-1 மற்றும் 2ல் மறு கட்டுமானம் செய்தல் ஆகிய பணிகளை செய்ய முடிவு  செய்யப்பட்டு, பணிகள் தொடங்கின.

இந்நிலையில், மடை மறுகட்டுமானப்  பணி செய்து முடித்தபோது, மழைக்காலம் தொடங்கியது. கண்மாயில் தண்ணீர்  இருந்ததால் தூர்வார முடியவில்லை. கரைகளை முழுமையாக பலப்படுத்தவில்லை.  தற்போது வனப்பகுதியிலிருந்து வரும் மழைநீர் யானைக்கஜம் ஓடை வழியாக  கேசவபுரம் கண்மாய்க்கு வரும் வகையில், ரூ.4 கோடியில் வரத்துக்கால்வாய் பணி  முடிக்கப்பட்டுள்ளது. ஆனால், கண்மாயை தூர்வாராததால் தண்ணீரை சரியாக தேக்க  முடியவில்லை. எனவே, கண்மாயை தூர்வார அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த  பவுன்ராஜ் கூறுகையில், ‘குடிமராமத்து பணிக்கு அதிமுக ஆட்சியில் ரூ.40  லட்சம் ஒதுக்கியும், பணிகளை முறையாக செய்ய அதிகாரிகள் ஆர்வம் காட்டவில்லை.  பணத்தை பங்கு போடுவதிலே குறியாக இருந்தனர். கண்மாய் தூர்வாரினால்தான் அதிக  தண்ணீரை சேமிக்க முடியும். கண்மாயில் வடக்கு, மேற்கு பக்க கரைகள் மட்டுமே  பலப்படுத்தப்பட்டுள்ளன.

கிழக்கு பக்க கரையை விவசாயிகள் பலப்படுத்தினர்.  தெற்கு பகுதியில் அளவீடு செய்து கல் போட்டதோடு சரி, இப்போது அந்த கற்களை  காணவில்லை. அருகிலுள்ள சிலர் தெற்கு கரையை ஆக்கிரமித்துள்ளனர். கண்மாயில்  கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, யானைக் கஜம் ஓடை வழியாக  கேசவபுரம் கண்மாய்க்கு வரும் மழைநீரை சேமிக்கும் வகையில், கண்மாயை தூர்வார  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : AIADMK government , Pillar: In the AIADMK regime, Rs.
× RELATED நாங்கள் கூட்டணி வைக்கலனா அதிமுக ஆட்சி...