×

உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாதிகள் கைது: மாயாவதி சந்தேகம்

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மனதில் சந்தேகத்தை எழுப்புவதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.  உத்தரப்பிரதேசத்தில் நேற்று முன்தினம் அல்கொய்தா தீவிரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் காரணமாக தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல் சதி திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்து இருந்தனர். தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இதனை கடுமையாக விமர்சித்து இருந்தார். ‘‘உத்தரப்பிரதேச போலீசாரை நம்பமுடியாது. குறிப்பாக பாஜ அரசை நம்பமுடியாது” என குறிப்பிட்டு இருந்தார்.

அகிலேஷை தொடர்ந்து தற்போது பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் தீவிரவாதிகள் கைது குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக மாயாவதி தனது டிவிட்டர் பதிவில்,‘‘லக்னோவில் தீவிரவாதிகள் சதி  திட்டம் முறியடிக்கப்பட்டது உண்மையெனில், இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால் இதில் எந்த அரசியலும் செய்யக்கூடாது. உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கைகள் மக்கள் எண்ணத்தில் சந்தேகத்தை உருவாக்கும். இந்த நடவடிக்கைக்கு பின் ஏதாவது உண்மை இருக்குமானால், போலீசார் ஏன் இவ்வளவு காலமாக இந்த செயல்பாடுகளை மறந்துவிட்டனர்? இந்த கேள்வியை மக்கள் எழுப்புவார்கள். எனவே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால் மக்களிடையே இது அமைதியின்மையை ஏற்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Uttar Pradesh ,Mayawati , UP , Militants, arrested, Mayawati
× RELATED ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு இன்றி...