×

வேட்பு மனுவில் தவறான தகவல்கள் குறிப்பிட்ட விவகாரம் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை கோரி வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: வேட்பு மனுவில் தவறான தகவல்களை குறிப்பிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் கே.சி.வீரமணி மற்றும் தேர்தல் ஆணையம் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலூர் காந்திநகரை சேர்ந்த பி.ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் 3வது முறையாக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போட்டியிட்டு திமுக வேட்பாளர் தேவராஜிடம் தோல்வியடைந்தார். அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கலின்போது வேட்புமனுவில் தவறான, பொய்யான தகவல்களை பதிவு செய்துள்ளார்.

வேட்பு மனு பரிசீலனையின்போது கே.சி.வீரமணியின் வேட்புமனு குறித்து நான் எனது ஆட்சேபனையை தெரிவித்து தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் புகார் செய்தேன். எனது மனு நிராகரிக்கப்பட்டது. கே.சி.வீரமணி தனது வேட்புமனுவில் உள்ள பார்ம்-26ல் சொத்து விபரங்களை முன்னுக்கு பின் முரணாக தெரிவித்துள்ளார். அவரது மனைவியின் நிரந்தர வங்கி கணக்கு, பான் கார்டு, வருமானவரி தாக்கல் செய்த விபரங்கள் ஆகியவற்றை தவறாக குறிப்பிட்டுள்ளார். அவரது மாமா நடத்தும் கல்வி அறக்கட்டளைக்கு ரூ.2.5 கோடியை மாற்றம் செய்தது, ஜோதிமணி எஸ்டேட் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ.1 கோடி வாங்கியது உள்ளிட்ட தகவல்களை மறைத்துள்ளார். அவருக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பில் ஏலகிரியில் செயல்படும் ஓட்டல் குறித்து வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை. குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்கள், அவர்களின் வருமான வரி தாக்கல் விபரங்கள், பான் கார்டுகளின் எண்கள் அனைத்தையும் தவறாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 தேர்தலின்போது அவர் வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை குறைத்து காட்டியுள்ளார். வேட்புமனு பக்கம் 9ல் தனது அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.33 கோடியே 83 லட்சத்து 37,743 என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், 18ம் பக்கத்தில் தனது அசையும் சொத்துக்கள் மதிப்பு ரூ.9 கோடியே 80 லட்சத்து 1,920 என்று முரணாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2016 தேர்தலின்போது பெங்களூரில் உள்ள ஒரு வங்கியில் இரண்டு கணக்குகள் உள்ளதை தெரிவித்திருந்த கே.சி.வீரமணி, இந்த தேர்தலில் அதை வேட்புமனுவில் மறைத்துள்ளார். இதேபோல், சொத்துக்கள் வாங்கிய தொகைகளையும் தவறுதலாக குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் ஏப்ரல் 3ம் தேதி மனு கொடுத்தேன். எனது மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட கலெக்டரிடம் எனது மனு மீது நடவடிக்கை எடுக்க கோரி மே 25ம் தேதி மனு கொடுத்தேன். அந்த மனுவை மே 26ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரி நிராகரித்து உரிய நீதிமன்றத்தை அணுகுமாறு உத்தவிட்டார். எனவே, எனது மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் தருமாறு கே.சி.வீரமணி மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். கே.சி.வீரமணிக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பில் ஏலகிரியில் செயல்படும் ஓட்டல் குறித்து வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை.


Tags : KC Veeramani ,Court ,Election Commission , Case seeking action against former minister KC Veeramani over misrepresentation in nomination
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...