காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் கட்சி தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை நியமித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி பரிந்துரையின்பேரில், பிரதிநிதிகள் சபை எனப்படும் நாடாளுமன்ற கீழவையை கலைத்து கடந்த மே 22ம் தேதி அதிபா் வித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டாா். நாடாளுமன்றத்துக்கு நவம்பா் மாதம் தோ்தல் நடத்தவும் அவா் உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை எதிா்த்து நேபாள காங்கிரஸ் கட்சி உட்பட 30 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நாடாளுமன்ற கலைப்பை ரத்து செய்ய வேண்டும்; நேபாள காங்கிரஸ் தலைவா் ஷோ் பகதூா் தாபாவை பிரதமராக நியமிக்க வேண்டும் எனக் கோரி எதிா்க்கட்சிகள் சாா்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமா்வு முன் நடைபெற்று வந்த இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த 5ம் தேதி நிறைவடைந்தது. ‘இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கக்கூடும்’ என மூத்த வழக்குரைஞா் தினேஷ் திரிபாதி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், ஷெர் பகதூரை பிரதமராக நியமித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இன்னும் 28 மணி நேரத்திற்குள் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு ஆளும் கம்யுனிஸ்ட் கட்சிக்கும் அதன் தலைவரான கேபி ஷர்மா ஒலிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.