×

டிப்ளமோ படித்து மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி பரிதாப பலி

இளம்பிள்ளை: சேலம் அருகே போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி இறந்தார். இதையடுத்து போலி டாக்டரை போலீசார் கைது ெசய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30), தறித்தொழிலாளி. கடந்த இரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மணிகண்டன், அங்குள்ள சிவக்குமார்(51) என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், அவரது ஆலோசனைப்படி நாள்தோறும் தொடர்ச்சியாக ஊசி போட்டுக்கொண்டார்.  சில நாட்களில் மணிகண்டனுக்கு, நரம்பு தளர்ச்சி ஏற்பட்டதுடன், இடுப்பிற்கு கீழ் உள்ள பகுதிகள் செயலிழந்தன. இதனையடுத்து கடந்த 2ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் மணிகண்டன் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மணிகண்டன் உயிரிழந்தார்.

தகவலறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள், மணிகண்டனின் உயிரிழப்பிற்கு, டாக்டர் சிவக்குமார் தொடர்ந்து போட்ட ஊசி தான் காரணம் என குற்றம்சாட்டினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், டாக்டர் சிவக்குமாரை தேடி வந்தனர். இதனிடையே, நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த அவரை போலீசார் மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர் போலி டாக்டர் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர்.  இது குறித்து போலீசார் கூறுகையில், ”சேலத்தை சேர்ந்த சிவக்குமார், மருத்துவம் சார்ந்த டிப்ளமோ படிப்பை நிறைவு செய்துள்ளார். தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர், பின்னர் தனியாக மருத்துவமனை தொடங்கி ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். தற்போது அவரிடம் ஊசி போட்டுக்கொண்ட மணிகண்டன் உயிரிழந்துள்ளதால், கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

Tags : Diploma, Hospital, Fake Doctor,, Worker
× RELATED மேட்டுப்பாளையம் அருகே சுற்றுலா வேன்...