இன்றும், நாளையும் மிஸ் பண்ணாதீங்க செவ்வாய், வெள்ளி கோள்கள் நெருங்கி வரும் அரிய நிகழ்வு: மேற்கு வானில் மாலையில் பார்த்து ரசிக்கலாம்

மதுரை: செவ்வாய், வெள்ளி கோள்கள் நெருக்கமாக தோன்றும் அதிசய நிகழ்வை சூரியன் மறைவிற்கு பிறகு மேற்கு வானில் இன்றும், நாளையும் கண்டு ரசிக்கலாம். வானம் ஒரு போதி மரம் என்பார்கள். அதிசயிக்கத்தக்க அறிவியலை வான்வெளியும், இதில் வலம் வரும் கோள்களும் தன்னகத்தே கொண்டுள்ளன. செவ்வாய் கோளும், வெள்ளி கோளும் ஒன்றை  ஒன்று நெருங்கி கைகுலுக்குவது போல அற்புதக்காட்சி, சூரியன் மறைந்தபிறகு மேற்கு வானில் இன்றும், நாளையும் தெரியும். நாளை (ஜூலை 13) இந்த இரு கோள்களுக்கு இடையே  வானில் வெறும் 0.5 டிகிரி இடைவெளிதான் இருக்கும். இன்று (ஜூலை 12) ஒன்றை ஒன்று நெருங்கி வருவது போல வானில் காட்சி தரும். செவ்வாய், வெள்ளி  கோள்களுக்கு சுமார் நான்கு டிகிரி தொலைவில் பிறை சந்திரன் தென்படும்.

இன்று  மாலை மேற்கு வானில் தென்படும் இந்த நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கோள்கள் ஒன்றை ஒன்று நெருங்கும் காட்சியை தொலைநோக்கி எதுவுமின்றி வெறும் கண்களால் கண்டு ரசிக்கலாம். இதில் எந்தவித  ஆபத்தும் இல்லை. இப்படிப்பட்ட  வான் நிகழ்வுகள் மனிதருக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாது. மேற்கு அடிவானம் தெளிவாக தெரியும் வகையில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து, மாலையில் சூரியன் மறைந்த பின்னர் வானத்தைப்  பார்த்தால் இரு கோள்கள் அடுத்தடுத்த நாட்களில் ஒன்றை ஒன்று நெருங்குவதை தெளிவாக காணலாம். உண்மையில் இரு கோள்களும் விண்வெளியில் ஒன்றை ஒன்று  நெருங்காது. பூமியிலிருந்து பார்க்கும்போது அது ஒன்றை ஒன்று நெருங்குவது போல காட்சியளிக்கும் என்கின்றனர் அறிவியலாளர்கள்.

மதுரை பேராசிரியர் ஸ்டீபன் இன்பநாதன் கூறும்போது, ‘‘மேற்கு வானில் சூரியன் அஸ்தமித்து சுமார் 45 நிமிடம் கழித்து கோள்கள் நெருக்கமாகத் தோன்றும் இந்த அதிசயத்தை வெறும் கண்களால் நாம் காணலாம். இந்நிகழ்வு 2019, ஆக. 24ல் தோன்றியது. அப்போது இது சூரியனுக்கு அருகில் இருந்ததால் தெளிவாக காண முடியவில்லை. இதுபோன்ற நிகழ்வு இனி 2024, பிப். 22ல் காணலாம். இது அருகருகே காணப்படும். ஆனால் இன்றும், நாளையும் (ஜூலை 12, 13) நிகழும் இந்நிகழ்வைப் போல் காண வேண்டுமென்றால், 2034, மே 11 வரை காத்திருக்க வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் அவ்வப்போது வானில் நிகழ்ந்தாலும் நாம் வெறும் கண்களால் இதனை தெளிவாக காண முடியாது. ஆகவே இந்நிகழ்வை குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் அனைவரும் கண்டு மகிழ்வது அவசியம்’’ என்றார்.

* படம் எடுக்கலாம்... பரிசு வெல்லலாம்

செவ்வாய், வெள்ளி கோள்கள் நெருங்கும் நிகழ்வைப் புகைப்படம் எடுப்போர் outreach@iiap.res.in என்ற இ-மெயில் முகவரிக்கு அனுப்பினால் தேர்வாகும் படங்களை அவர்களது இணையத்தில் வெளியிடுவர். பரிசும் கிடைக்கும்.

Related Stories:

More