×

பவானி அருகே பரபரப்பு: அம்மன் கோயிலில் சிலைகள் உடைப்பு: போலீசார் நேரில் விசாரணை

பவானி:  பவானி அருகேயுள்ள தொட்டிபாளையம் ஊராட்சி, ஜல்லிக்கல்மேடு கிராமத்தில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் கணபதி, அங்காளம்மன், பெரியாண்டிச்சி அம்மன், வீரகாரன் மற்றும் கருப்பண்ணசாமி ஆகிய சாமிகளுக்கு கோயில் உள்ளது. இக்கோயிலைப் புதுப்பித்து கடந்த வருடம் மார்ச் மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருந்தனர். அப்போது, பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக அதே பகுதியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, ஜேசிபி எந்திரம் கொண்டு கோயிலின் மேற்கூரை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை இடித்து தரைமட்டமாக்கினர்.
இதையடுத்து, பவானி வருவாய்த்துறையினர் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அதே இடத்தில் சிலைகளை மட்டும் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று அதிகாலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தபோது கோயில் சிலைகள் இடித்து தள்ளப்பட்டு, கீழே கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  சம்பவ இடத்துக்கு பவானி டிஎஸ்பி கார்த்திகேயன், பவானி இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags : Bavani ,Amman , Bhavani, Amman Temple, Statues, Breakdown
× RELATED வேண்டுவோருக்கு வேண்டியதை அளிக்கும் வெக்காளி அம்மன்