இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலங்களை பத்திரப்பதிவு செய்வதை தடுக்க நடவடிக்கை: ஆணையர் குமரகுருபரன், நில நிர்வாக ஆணையருக்கு கடிதம்

சென்னை:  இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை பாதுகாக்காமல் விட்டதன் விளைவாக சமூக விரோதிகள் சிலர் கோயில் சொத்துக்களை தங்களது பெயருக்கு பதிவு செய்தும், பட்டா மாற்றியும் அபகரித்து கொண்டனர்.    இதேபோல கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாத நிலையில், அறநிலையத்துறையின் பெயரில் உள்ள சொத்துக்களை சிலர் ஆக்கிரமித்து வருகின்றனர்.

இது தொடர்பாக வருவாய்த்துறை ஆவணங்களில் உள்ள நிலையில் அறநிலையத்துறையிடம் இல்லாததால் அவற்றை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நில விவரங்களை கண்டறிந்து அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

அதன்பேரில் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்களை ஆய்வு செய்து, அதை அறிக்கையாக அனுப்ப அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஒவ்வொரு ேகாயில்களுக்கு சொந்தமான நில விவரங்களோடு, வருவாய்த்துறை தமிழ் நில பதிவுகளோடு ஒப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. தற்போது, முழுமையாக ஒத்து போகும் இனங்களான 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் ஆவணங்கள் ஒப்பீடு செய்து இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.இந்த நிலையில் கோயில் நிலங்களை போலியான ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்வதை தடுக்கும் வகையில் முழுமையாக ஒத்து போகும் இனங்களுக்கு ‘டி’ என்கிற தலைப்பின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், நில நிர்வாக ஆணையர் நாகராஜனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்கள், வருவாய்த்துறை தமிழ் நில பதிவுகளோடு ஒப்பீடு செய்து 3 இனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையாக ஒத்து போகும் இனங்கள், பகுதியாக ஒத்து போகும் இனங்கள், புதிய இனங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், முழுமையாக ஒத்து போகும் இனங்கள் அறநிலையத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு பகுதி ஒத்து போகும் இனங்கள் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் அறநிலையத்துறை கோயில் நிர்வாகிகள் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த கோயில் மேலாண்மை திட்டம் மற்றும் மென்பொருள் 2.0 இணையளத்தை இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயில் நிலங்கள் தொடர்பான விவரங்களை வில்லங்க சான்று பார்த்து ஆய்வு  செய்து தெளிவுப்படுத்தி கொள்ள முடியும். தற்போது, இணைப்பு பணி வேகமாக நடந்து வருகிறது. விரைவில் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்துடன் இணைப்பு நடைமுறை அமலுக்கு வரும்.

தமிழ்நிலம் பதிவுகளோடு முழுவதுமாக ஒத்தும் போகும் கோயில் இனங்கள் ‘டி’ என்று குறிப்பிட பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சார்பதிவாளர்கள் முழுமையாக ஒத்து போகும் ஆவணங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன் மூலம் கோயில் நிலங்களை போலியான ஆவணங்களை தயார் செய்து பதிவு செய்வது தடுக்க முடியும். எனவே, இது தொடர்பாக தேசிய தகவல் மையம் (நிக்) உரிய உத்தரவு பிறப்பிக்க வேணடும். மேலும், இதற்கு முன்னுரிய அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்காமல் விட்டதால்  சமூக விரோதிகள் சிலர் கோயில் சொத்துக்களை தங்களது பெயருக்கு பதிவு செய்தும், பட்டா மாற்றியும் அபகரித்து கொண்டனர். 

Related Stories:

More