×

கேரளாவில் ஜிகா வைரசால் 15 பேர் பாதிப்பு எதிரொலி எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரம்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

சென்னை: கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த 24 வயது நிறைமாத கர்ப்பிணிக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. தற்போது குழந்தை பிறந்துள்ள நிலையில் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் கூறியதாவது: தமிழக, கேரளா எல்லை மாவட்டங்களில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.


தற்போது ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த முதல்வர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அதன் அடிப்படையில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. அதேபோல் எல்லை மாவட்டங்களில் தற்போது மழை பெய்துள்ளது. நல்ல தண்ணீரில் ஏடிஸ் கொசு வளரும் என்பதால் வீட்டு அருகாமையில் தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள் போன்றவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் வீட்டின் மொட்டை மாடிகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.  மேலும் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளான காய்ச்சல், சரும பாதிப்பு, தலைவலி, மூட்டுவலி, சிவந்த கண்கள் போன்ற பாதிப்பு தான் ஜிகா வைரசிற்கும் ஏற்படும்.எனவே அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரை அணுக வேண்டும். குறிப்பாக கர்ப்பிணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் பிறக்கும் குழந்தை உடல் ஊனமாக பிறக்க வாய்ப்புள்ளது. எனவே எவ்வித உடல் பாதிப்பாக இருந்தாலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும். அதிக தண்ணீர், காய்கறி, விட்டமின் மாத்திரை போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Kerala ,Public Health Department , Kerala, Zika virus, surveillance, public health
× RELATED தமிழகத்தில் பறவை காய்ச்சல் வதந்திகளை...