×

பிரதமர் மோடியை நாளை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!: 7 பேர் விடுதலை, நீட் விவகாரம் பற்றி ஆலோசிக்க வாய்ப்பு..!!

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை மாலை 4 மணிக்கு சந்திக்கிறார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி இறுதியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லிக்கு வருகை தந்திருந்தார். அச்சமயம் பிரதமர் மோடி, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்திருந்தார். இந்த நிலையில் நாளைய தினம் அவர் டெல்லிக்கு வருகின்றார். நாளை நண்பகல் சரியாக 1:30 மணிக்கு டெல்லி விமான நிலையத்திற்கு ஆளுநர் வருகை புரிகிறார். அதன் பிறகு நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் பிரதமர் இல்லத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார்.

நாளை மறுநாள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பதவி ஏற்ற பிறகு முதல்முறையாக பிரதமரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்க உள்ளார். அச்சமயம் தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து நிச்சயமாக பிரதமர் மோடியிடம் அவர் எடுத்துரைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது. அதேபோல கொரோனா நிலவரம், 7 பேர் விடுதலை, நீட் விவகாரம் உள்ளிட்ட தமிழக அரசின் கோரிக்கைகள் ஆளுநரின் சார்பாக பிரதமரிடம் எடுத்து வைக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் சந்திப்பு என்பது அரசியல் நகர்வுகளுக்கு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.


Tags : PM ,Modi ,Governor ,Panwaril Brokith , Meeting with Prime Minister Modi, Governor of Tamil Nadu Banwarilal Purohit
× RELATED பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு பிற்பகலில் விசாரணை..!!