×

தேவையற்ற கருத்துக்களை தவிர்த்திடுக.. பணிகளில் அதிக கவனம் செலுத்துக : புதிய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!!

டெல்லி : கேரளா மற்றும் மராட்டியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. அமைச்சர்கள் இடையே பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கு தளர்வுகளில் பொதுமக்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை மறந்து சுற்றி திரிவதாக குறிப்பிட்டார். கேரளா மற்றும் மராட்டியத்தில் கொரோனா அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றிய அமைச்சர்களின் செயல்பாடு மக்களின் அச்சத்தை தூண்டும் வகையில் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

கொரோனாவை வென்று விட்டோம் என்று எப்போதுமே தன்னிறைவு அடைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, ஒரு சிறிய தவறு கூட நாட்டில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.மூத்த அமைச்சர்களிடம் மட்டுமின்றி, ராஜினாமா செய்த அமைச்சர்களிடம் கூட ஆலோசனைகளை கேட்டு செயல்படுமாறு புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பணிகளுக்கு அப்பாற்பட்டு விளம்பரம் மற்றும் ஊடக வெளிச்சத்திற்கு அமைச்சர்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என எச்சரித்துள்ள பிரதமர் மோடி, தேவையற்ற அறிக்கைகளை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.


Tags : PM ,Modi , பிரதமர் மோடி
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...