அதிமுக ஆட்சியில் போட்ட புதிய சாலை கையோடு வந்ததால் தமிழக நெடுஞ்சாலைத்துறை இன்ஜினியர்கள் 3 பேர் சஸ்பெண்ட்: தனியார் நிறுவன ஒப்பந்தமும் ரத்து; அமைச்சர் எ.வ.வேலு அதிரடி

சென்னை: ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி தரமற்ற சாலைகள் அமைத்த விவகாரத்தில் அமைச்சர் எ.வ.வேலு உத்தரவின்பேரில் 3 இன்ஜினியர்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் மாநில, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலை என மொத்தம் 58 ஆயிரம் கி.மீ நீள சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்துவது, மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

அந்தவகையில், 2020-21ம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் நிதியை பயன்படுத்தி சிவகங்கை மாவட்டம் ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம் இடையே சாலை அமைக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இந்த சாலை தரமாக அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அந்த சாலை போட்ட சில நிமிடங்களிலேயே சிலர் தங்கள் கையாலேயே பெயர்த்து எடுப்பது போன்ற வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த தகவல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த அமைச்சர் உத்தரவிட்டார்.

அதன்பேரில்,  நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குனர் கீதா சாலைப் பணிகளை நேரில் ஆய்வு செய்து முறையான விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்த அறிக்கை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். இதனால், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி  உதவி கோட்டப்பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர் மருதுபாண்டி, தரக்கட்டுப்பாடு உதவி பொறியாளர் நவநீதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில் உத்தரவிட்டார். மேலும், சாலை பணி ஒப்பந்ததாரர் தர்ஷன் அன் கோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக, நெடுஞ்சாலை  துறைகளில் அதிரடி நடவடிக்கைகளை அமைச்சர் எ.வ.வேலு எடுத்து வருகிறார். திமுக  ஆட்சியில் தொடங்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்களை தொடங்கவும்  உத்தரவிட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழல்களையும் களைய உத்தரவிட்டுள்ளார். கான்ட்ராக்டர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதிகாரிகளிடமும் பணிகளை முடுக்கி விட்டு வந்தார். அப்போது தவறு செய்யும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். தற்போது தவறு நடந்திருப்பது உறுதி செய்ததையடுத்து 3 இன்ஜினியர்களையும் சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுத்திருப்பதால், நெடுஞ்சாலை துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: