×

திருவாரூர் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மையம் திறப்பு : 100% மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்டூர் கிராமத்திற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார் முதல்வர்!!

திருச்சி: திருவாரூரில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த ஊரான திருவாரூருக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். மன்னார்குடி அடுத்த செருமங்கலம்  கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்துக்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் இன்று காலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு மருத்துவமனை தற்காலிக பணியாளர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.10.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். 4 அறுவை சிகிச்சை மையம், 250 படுக்கை வசதிகளுடன் 70 ஆயிரம் சதுர அடி பரப்பில் தாய் சேய் நல மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அப்போது சுகாதார துறை சார்பில் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவள்ளுவர் படம் மற்றும் திருக்குறள் கொண்ட நினைவு பரிசை முதல்வரு்ககு வழங்கினார்.

தமிழ்நாட்டிலேயே 100 % மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்டூர் கிராமத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காட்டூர் ஊராட்சி மன்ற தலைவிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து காரில் கச்சனம் வழியாக நாகை மாவட்டம் திருக்குவளைக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு தனது தந்தை கலைஞர் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதுடன் அங்குள்ள நூலகத்தை பார்வையிடுகிறார்.இதனைத்தொடர்ந்து திருவெண்காடு சென்று அங்கு ஓய்வெடுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை அங்கிருந்து காரில் புதுச்சேரி வழியாக சென்னைக்கு செல்கிறார்.



Tags : Thiruvarur Government Hospital , மகப்பேறு மருத்துவமனை
× RELATED ₹13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற...