×

தன் உயிரை துச்சமென மதித்து இளைஞரை காப்பாற்றிய பட்டுக்கோட்டை காவலர் ராஜகண்ணனுக்கு பிரதமரின் உயிர் காக்கும் விருது அறிவிப்பு

பட்டுக்கோட்டை : ஆற்றில் விழுந்து உயிருக்கு போராடிய நபரை தனது உயிரை துச்சம் என மதித்து காப்பாற்றிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த காவல் நிலைய காவலரான ராஜ கண்ணன் என்பவருக்கு பிரதமரின் உயிர் காக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ள 35 வயதான ராஜ் கண்ணன், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 2015ம் ஆண்டு ஆற்றில் விழுந்த ஒருவரை காப்பாற்றியதற்காக 2018ம் ஆண்டுக்கான பிரதமரின் உயிர் காக்கும் விருது இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மொத்தம் 14 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று காவலர் ராஜ் கண்ணன் தெரிவித்துள்ளார்.தஞ்சையில் ஆயுத படையில் பணியாற்றிய ராஜ கண்ணன், அப்போதைய தஞ்சை மாவட்ட எஸ்.பி. தர்மராஜுக்கு பாதுகாவலராக இருந்தார். அப்போது 2015ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி கல்லணை கால்வாய் ஆற்றில் 29 வயதான ராம்குமார் என்பவர் தவறி விழுந்துவிட்டார். அந்த வழியாக பணிக்கு சென்ற ராஜ்கண்ணன் தனது உயிரை பொருட்படுத்தாமல் ஆற்றில் குதித்து 1 மணி நேரம் போராடி அந்த இளைஞரை உயிருடன் மீட்டார். இதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Pattukottai ,Policeman ,Rajakannan , பட்டுக்கோட்டை
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு