தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக், ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது: வாகனங்கள் பறிமுதல்

சென்னை:  சென்னை மெரினா காமராஜர் சாலை, இசிஆர், ராஜிவ்காந்தி சாலை, மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலை, 400 அடி வெளிவட்ட சாலை ஆகிய சாலைகளில் சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பைக், ஆட்டோ ரேஸ்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தன. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ரேஸில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, வானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும் பலர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையில் நடைபெற்ற ஒரு ஆட்டோ ரேஸில் மெக்கானிக் பிரபாகரன் என்பவர் பரிதாபமாக பலியானார். கொரோனா ஊரடங்கினால் பைக், ஆட்டோ ரேஸ்கள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் பைக், ஆட்டோ ரேஸ் தலைதூக்கியுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் பைக், ஆட்டோ ரேஸ் நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோ, 30க்கும் மேற்பட்ட பைக்குகளில் பலர் பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பைபாஸ் சாலையில் ஆட்டோ, பைக் ரேஸில் ஈடுபட்டது தொடர்பாக எம்ஜிஆர் நகரை சேர்ந்த மகேஷ் (23), ராமாபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (35), ஸ்ரீதர் (29), சின்னையா (31) ஆகிய 4 பேரை  போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரேஸில் பயன்படுத்திய 2 ஆட்டோ மற்றும் 4 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து கைதான நபர்களிடம் தொடர்ந்து விசாரணை  நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>