×

பணம் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி; ரூ70 லட்சத்துடன் தப்பிய காஞ்சி ஆசாமிக்கு வலை: கைதான 6 பேர் சிறையிலடைப்பு

கிருஷ்ணகிரி: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கவரை தெருவை சேர்ந்தவர் நாசர் (38). மொத்த காய்கறி கடை வைத்துள்ளார். இவர் தினமும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து காய்கறிகளை வாங்கிச்செல்வார். இதற்கான பணத்தை மாதந்தோறும் கொடுத்து வந்தார். இவரிடம் லோடுமேனாக ராஜேஷ் (26), மோகன்ராஜ் (27), ஜெயகுமார்(26), கேஷியராக முத்துகுமரன்(32), டிரைவராக காமராஜ் (எ) நரி (25) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். நாசர் சென்ற மாதம் காய்கறி வாங்கியதற்கு ரூ1 கோடி கொடுக்க வேண்டியுள்ளது.

ஆனால், அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. இதுகுறித்து நாசர், தனது கேஷியர் முத்துகுமரனிடம் கூறியபோது, லோடுமேன் ராஜேஷ், கேஷியர் முத்துகுமரன் ஆகியோர் தங்களுக்கு தெரிந்த இருவர் இருப்பதாகவும், அவர்களிடம் பணம் கொடுத்தால், அதை இரட்டிப்பாக்கி தருவர் எனவும், ரூ80 லட்சத்தை புரட்டி கொடுத்தால், அவர்கள் உடனடியாக ரூ1 கோடியாக தருவார்கள் என்றும் கூறி அவரை மூளைச்சலவை செய்துள்ளனர். இதற்கு ஆசைப்பட்ட நாசர் ரூ80 லட்சம் தயார் செய்து முத்துகுமரன், ராஜேஷ் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, ராஜேஷ், முத்துகுமரன், லோடுமேன்கள் ஜெயக்குமார், மோகன்ராஜ், டிரைவர் காமராஜ் ஆகிய 5 பேரும், நாசரின் காய்கறி வண்டியில் பணத்தை எடுத்துக்கொண்டு, கிருஷ்ணகிரி நோக்கி கடந்த 2ம்தேதி வந்தனர். அப்போது, ராஜேஷ் வரும் வழியில் பணத்தை இரட்டிப்பு செய்து தரும் நபர்களான காஞ்சிபுரத்தை சேர்ந்த அபுபக்கர், வேதாரண்யத்தை சேர்ந்த பண்டரி ஆகியோரிடம் போனில் பேசியபடி வந்துள்ளார். அன்று மாலை கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே வந்து விட்டதாக தகவல் தெரிவித்தார்.

அப்போது, அங்கு காரில் வந்த அபுபக்கர் மற்றும் பண்டரியிடம், ரூ70 லட்சத்தை மட்டும் கொடுத்து விட்டு முத்துகுமரன் மற்றும் ஜெயக்குமார் மீதமிருந்த ரூ10 லட்சத்தை எடுத்து வைத்துள்ளனர். பின்னர், அவர்களிடம் முத்துகுமரன், ராஜேஷ் ரூ1 கோடி பணத்தை கேட்டபோது, அவர்கள் வேறு இடத்திற்கு செல்லலாம். இங்கு வேண்டாம் எனக்கூறியதையடுத்து, அனைவரும், குப்பம் சாலை காட்டிநாயனப்பள்ளி அருகேயுள்ள பள்ளி அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது, பணத்தை தருமாறு முத்துகுமரன் கேட்ட போது, போலீசாரின் சைரன் வாகன ஒலி கேட்டதால் அதிர்ச்சியடைந்த அபுபக்கர் மற்றும் பண்டரி ஆகியோர், போலீசார் வருகின்றனர், மாட்டிக்கொள்வோம் எனக்கூறி ரூ70 லட்சத்துடன் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து காமராஜ், நாசருக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நாசர், தனது நண்பரான கோவை சித்தாபுதூரை சேர்ந்த சந்திரகுமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் 7 பேரும் இணைந்து, நேற்று மகாராஜாகடை போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரை பெற்ற போலீசார், பணத்தை இரட்டிப்பாக்க முயற்சி செய்த நாசர், முத்துகுமரன், ராஜேஷ், மோகன்ராஜ், காமராஜ், ஜெயக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும், பணத்தை பறித்துச்சென்ற அபுபக்கர் மற்றும் பண்டரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு பணம் இரட்டிப்பு செய்து தருவதாக அபுபக்கர், பண்டரி ஆகியோர் ₹15லட்சத்தை ஏமாற்றி பறித்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே கைது செய்யப்பட்ட 6பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் அஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags : Kanchi Asami , Fraud for doubling money; Kanchi Asami escapes with Rs 70 lakh nabbed
× RELATED துபாய் விமானத்துக்குள் பதுக்கி வைத்த...