தமிழகத்தில் கோயில்கள் இன்று திறப்பு: 100 சதுர மீட்டருக்குள் 20 பக்தர்களுக்கு அனுமதி; பக்தர்கள் தரிசனம் செய்ய டோக்கன் முறை அமல்

சென்னை: தமிழகத்தில் கோயில்கள் இன்று திறக்கப்படவுள்ள நிலையில், பக்தர்கள் பாதுகாப்பு விதிமுறைகளுடன் தரிசனத்துக்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த ஏப்ரல் 19ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜை நடத்தப்பட்டன. இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா ஓரளவு கட்டுபாட்டுக்குள் வந்த நிலையில் கோயில்களை திறக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இதையேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோயில்கள் கடந்த 5ம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கலாம். அதே நேரத்தில் அர்ச்சனை, திருவிழாக்கள், குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து கோயில்களில் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து கோயில்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. தொடர்ந்து கோயில்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டன. இந்த நிலையில், அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டி  நடைமுறைகளை பின்பற்றி இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறது.

கோயில்களில் குறைந்த பட்ச அளவில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏதுவாக டோக்கன் முறை அமல்படுத்தப்படுகிறது. அதில் ஒரு வார காலத்திற்கான டோக்கன்களை தரிசன தேதி மற்றும் நேரம் குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. அந்தெந்த கோயில் இடவசதிக்கேற்றாற் வகையில் ஒரு மணிநேரத்திற்கு எத்தனை பக்தர்களை சமூக இடைவெளியுடன் தரிசனத்திற்கு அனுமதிக்க கோயில் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் நுழைய, வெளியேறவும் ஒன்றுக்கும் மேற்பட்ட வாயில்கள் இருப்பின்  தரிசனத்திற்கு வரும் ஒரு வாயிலில் இரு வழிகள் அமைத்து ஒன்றில் உள்ளே சென்ற,  அடுத்த வழியில் வெளியே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை கோயில் நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.  

பக்தர்களின் உடல் வெப்ப நிலை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதித்த பின்பு கோயில் நுழைய அனுமதிக்கவும், பக்தர்கள் அணிந்து வரும் காலனிகளை தாங்களே வாகனத்திலேயே விட்டு வர அல்லது காலணி பாதுகாப்பு இடத்தில் பக்தர்கள் சுயமாக வைத்து திரும்ப அணிந்து செல்வது தொடர்பாக பக்தர்களுக்கு அறிவுரை வழங்க கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருபவர்கள், முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்பதை அறிவிப்பு செய்யவும், 100 சதுர மீட்டரில் 20க்கும் மேற்பட்ட பக்தர்களை அனுமதிக்கப்படக்கூடாது என்று கோயில் நிர்வாகங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

அர்ச்சகர்கள் கோயிலுக்கு வரும் பக்தர்களை தொட்டு குங்குமம், மஞ்சள், விபூதி, தீர்த்தம், பூ மற்றும் இதர பிரசாதங்கள் வழங்குவதை முற்றிலும் தவிர்க்கவும், பக்தர்கள் தேங்காய், பூ, பழம் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்க கூடாது, பக்தர்கள் பூஜை, அபிஷேகம் நடைபெறும் போது பக்தர்களை உள்ளே உட்கார்ந்து பார்வையிட அனுமதிக்க கூடாது, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், இதய நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதிற்கும் உட்பட குழந்தை ஆகியோர் கோயிலுக்கு வருவதை தவிர்ப்பது தொடர்பாக கோயில் நிர்வாகங்கள் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோயில் வளாகத்திற்குள் அவ்வ போது கிருமி நாசினி கொண்டு தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, கழிவறை, கை, கால்கள் அலம்பும் இடங்கள் சுத்தமாக பராமரிக்க வேண்டும். கோயில் உட்புறம் மற்றும் பிரகாரங்களில் 1 சதவீதம் சோடியம் ஹைபோகுளோரைட் கசைரசல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தெளிக்கப்பட வேண்டும் என்று அறநிலையத்துறை கோயில் நிர்வாகங்களுக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories: