×

‘கணவர் சாவில் சந்தேகம்’மாமியார், மைத்துனரால் எனது உயிருக்கும் ஆபத்து: எஸ்பியிடம் இளம்பெண் புகார்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தேவதானம் ரோடு ஜெ.ஜெ. நகரை சேர்ந்தவர் மல்லிகா. இவர் ராணிப்பேட்டை எஸ்பி ஓம்பிரகாஷ் மீனாவிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: வாலாஜா வட்டம், ரெண்டாடி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் விஜயலிங்கம். இவரும் நானும் காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் எங்களது திருமணத்தில் எனது மாமியார் கிருஷ்ணவேணிக்கு விருப்பம் இல்லை. திருமணமானது முதல் எனது மாமியார் என்னை ஆபாசமாக திட்டி ₹1 லட்சம் வரதட்சணை கொண்டு வரும்படி அடித்து துன்புறுத்தினார்.

தொடர்ந்து நடக்கும் இந்த தொல்லையில் இருந்து விடுபடும் வகையில் எனது கணவர் அவரது வீட்டில் ஒரு அறையில் தனியாக குடும்பம் நடத்த ஏற்பாடு செய்தார். அங்கு நாங்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். கடந்த 21-5-2021 அன்று எனது மாமியார் கிருஷ்ணவேணி, பத்திரம் ஒன்றை கொண்டு வந்து அதில் கையெழுத்து ேபாடும்படி எனது கணவரிடம் கூறினார். ஆனால் என் கணவர் கையெழுத்து போட மறுத்துவிட்டார். இதனால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது எனது மாமியார் கிருஷ்ணவேணி, எனது கணவரின் சகோதரர் சண்முகராஜ் ஆகியோர் என்னை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டனர்.

இதையடுத்து, நான் எனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டேன். மறுநாள் (22ம் தேதி) அதிகாலை 4 மணியளவில் எனது கணவர் இறந்துவிட்டதாக அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் எனது கணவரின் வீட்டிற்கு ஓடினேன். அங்கு ‘எனது கணவர் எப்படி இறந்தார்’ என கேட்டதற்கு ‘எங்களுக்கு தெரியாது’ என்று எனது மாமியார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தெரிவித்தனர். இதுகுறித்து ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்தேன். அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் எனது மாமியாரிடம் எனது கணவர் எப்படி இறந்தார் என கேட்டேன்.

அப்போதும், அவர்கள் என்னை அடித்துத் துன்புறுத்தினர். இதில், மனமுடைந்து விஷம் குடித்து தற்ெகாலைக்கு முயன்றேன். வாலாஜா அரசு மருத்துவமனையில் 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்தேன். மீண்டும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனது கணவரின் சாவில் சந்தேகம் உள்ளது. கணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்து தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் எனது கணவருக்கு சொந்தமான சொத்தை நான் எழுதி கொடுக்க வேண்டும் என்று என்னை எனது மாமியார் கிருஷ்ணவேணி, எனது கணவரின் சகோதரர் சண்முகராஜ் ஆகியோர் நிர்பந்தித்து வருகின்றனர்.

அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனவே எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். இந்த மனுகுறித்து ராணிப்பேட்ைட டிஎஸ்பி (பொறுப்பு) சரவணன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : SPP. , 'Suspicion of husband's death' Mother-in-law, brother-in-law endanger my life: Teen complains to SP
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்