கும்மிடிப்பூண்டி அருகே அதிகாலை பரபரப்பு; நாட்டு வெடிகுண்டுகளுடன் முதியவர் கைது: மகனை கொன்றவர்களை பழிவாங்க இருந்ததாக வாக்குமூலம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கி இருந்த முதியவர் கைது செய்யப்பட்டார். ரவுடியான தனது மகனை கொன்றவர்களை பழிவாங்க காத்திருந்ததாக அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த துரப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் தினக்குமார் (26).  இவர் மீது கும்மிடிப்பூண்டி, சிப்காட், ஆரம்பாக்கம், சோழவரம், ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்தியவேடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையுங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி  உள்ளிட்ட பல்வேறு வழக்குகள்  இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் கும்மிப்பூண்டி அருகே சிருபுழல்பேட்டை முத்து ரெட்டி கண்டிகை  சுடுகாடு பகுதியில் வைத்து  சில மர்ம நபர்கள் தினக்குமாரை சரமாரிவெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக  சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சில நபர்களை கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  இந்நிலையில், தனது மகனை கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்க தினக்குமாரின் தந்தை கோதண்டம் ( 62) நாட்டு வெடிகுண்டுகளுடன் கமாரபாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக  ஆரம்பாக்கம் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, போலீசார் இன்று அதிகாலை அப்பகுதிக்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரண்டு நாட்டு வெடிகுண்டுகளுடன் இருந்த கோதண்டத்தை கைது செய்தனர். வெடிகுண்டுகளை பறிமுதல்  செய்து, ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் மேற்கண்ட தகவலை அவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>