×

ரூ.142 கோடியில் மாதவரம் பால் பண்ணை விரிவாக்கம்: பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவிப்பு

சென்னை: ரூ.142 கோடியில் மாதவரம் பால் பண்ணை உள்ளிட்ட முக்கிய பால் பண்ணைகள் அனைத்தும் விரிவுப்படுத்தப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று ஆவின் தலைமை அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவித்தார். பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  தலைமையில் பால்வளத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பால் பண்ணைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆவின் தலைமை அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடைபெற்றது. இக்கூட்டத்தில் பால்வளத்துறை கூடுதல் செயலாளர்  ஜவஹர்,  மேலாண்மை இயக்குநர் கந்தசாமி  மற்றும் ஆவின் பொது  மேலாளர்கள்,  அலுவலர்கள்  கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சா.மு.நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, இந்திய அளவில் 3வது இடத்தை ஆவின் பெற்றுள்ளது. மேலும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மூலம் ரூ.227 கோடி மதிப்பிலும், நபார்டு வங்கி மூலம் ரூ.180 கோடி மதிப்பிலும், ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் மூலம் ரூ.21 கோடி மதிப்பிலும், பால் பதப்படுத்துதல் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி மூலம் ரூ.687 கோடி மதிப்பிலும், ஒருங்கிணைந்த பால் பண்ணை மேலாண்மை திட்டம் மூலம் ரூ.18 கோடி மதிப்பிலும், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்காலத்தில் ஆவின் நிறுவனத்தின்  வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில், மாதாவரம் பால்பண்ணையில் ரூ.142 கோடி செலவில் 10 லட்சம் லிட்டர் திறன் கொண்ட பால் பண்ணையாக விரிவு படுத்தும் திட்டம், சேலம் பால் பண்ணையில் 7  லட்சம் லிட்டர் பால்பத திறன் விரிவாக்கம், 30 மெ.டன் பால் பவுடர் திறன் ரூ.140 கோடி மதிப்பிலும், தஞ்சாவூர் பால்பண்ணையில் 1 லட்சம் லிட்டர் பால்பத திறன் ரூ.53 கோடி செலவிலும் , திருச்சி பால்பண்ணை 6000 லிட்டர் ஐஸ் கிரீம் தயாரிக்கும் திறன் ரூ.43 கோடி மதிப்பிலும், சோழிங்கநல்லூர் மற்றும் அம்பத்தூர் பால்பண்ணை விரிவாக்கம் ரூ.71 கோடி மதிப்பிலும், செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.

பள்ளி குழந்தைகளுக்கு பால்
தமிழகத்தில் அரசு பள்ளி குழந்தைகள்  அனைவருக்கும் பால் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுமானால் விவசாயிகள்  உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் ஆவின் நிறுவனமே கொள்முதல் செய்ய  இயலும். இதனால் ஆவின் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை நிர்ணயிக்க  தனிக்குழு அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆவடி நாசர் கூறினார்.

Tags : Madhavaram ,Dairy Minister ,Nasser , Rs 142 crore Madhavaram dairy farm expansion: Dairy Minister Nasser announces
× RELATED மாதவரம் மண்டலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைக்க பொது மக்கள் வேண்டுகோள்