எஸ்பிஐ ஏடிஎம்மில் கைவரிசை கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலி சிறையிலடைப்பு

சென்னை: சென்னையில் வேளச்சேரி, தரமணி, வடபழனி, பெரம்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 15 இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து ரூ.45 லட்சத்துக்கும் மேல் பணம் மாயமானது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின்படி கூடுதல் கமிஷனர் கண்ணன் தலைமையில், தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினரின் தீவிர வேட்டையில் அரியானா மாநிலம் சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் கடந்த 23ம் தேதி அமீர்அர்ஷ் என்பவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து ரூ.4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவன் அளித்த தகவலின்படி, மற்றொரு கொள்ளையனான வீரேந்திர ராவத்(23) மற்றும் நஜீம் உசேன் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியை தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். இதையடுத்து நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: