×

கார்த்தி நாயகனாக நடித்த கைதி 2ம் பாகம் எடுக்க தடை: கேரள நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கார்த்தி நாயகனாக நடித்த கைதி படத்தின் 2வது பாகத்தை எடுக்க தடை விதித்து கொல்லம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ல் வெளியான படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். தமிழில் இந்த படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. இந்த படம் தெலுங்கு உள்பட பல மொழிகளில் ரீமேக் செய்ய உரிமை பெற்றுள்ளனர். இதற்கிடையே இந்த படத்தின் 2வது பாகத்தை தயாரிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் கொல்லத்தை சேர்ந்த ராஜீவ் என்பவர் கொல்லம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2004ம் ஆண்டு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை வைத்து, ‘ஜீவகந்தி’ என்ற மலையாள பெயரில் ஒரு கதையாக எழுதினேன். இதன் பின்னர் நான் கேரளா திரும்பினேன். ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்திருந்த நான், எர்ணாகுளத்தில் உள்ள ஓட்டலில் பணிபுரிந்தேன். அந்த ஓட்டலில் சினிமாகாரர்கள் அதிகமாக தங்குவார்கள். அப்போது சினிமா தயாரிப்பாளர் ராஜனுடன் பழக்கம் ஏற்பட்டது.

அவர் மூலம் கைதி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர். பிரபுவுடன் பழக்கம் ஏற்பட்டது. 2007ல் அவரை நேரில் சந்தித்து என்னுடைய கதையை கொடுத்தேன். அதை படமாக தயாரிப்பதாக கூறி எனக்கு அப்ேபாது ரூ. 10 ஆயிரம் அட்வான்சாக கொடுத்தார். இதன் பிறகு கேரளா திரும்பிவிட்டேன். இந்தநிலையில் கைதி படம் சமீபத்தில் டிவியில் வெளியானபோது நான் அதை பார்த்தேன். அப்போது தான் எனது கதையின் ஒரு பகுதியை வைத்து அந்த படம் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இந்தநிலையில் என்னுடைய கதையை வைத்து இந்த படத்தின் 2வது பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முதல்பாகத்தை பல மொழிகளில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே கைதி படத்தின் 2வது பாகத்தை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயகுமார் கைதியின் 2வது பாகத்தை தயாரிக்கவும், மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : Karthy Man , Kerala court orders ban on Karthi hero
× RELATED மத்தியப் பிரதேசத்தில் உதவி சார்பு...