×

கூட்டுறவு வங்கியில் மோசடி நடந்த வழக்கு; துணை முதல்வரின் ரூ65 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவாரின் ரூ.65 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மகாராஷ்டிர மாநில கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25 ஆயிரம் கோடி மோசடி புகாரில், மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவாரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த மோசடி தொடர்பாக 2019ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அமலாக்கத் துறை அஜித் பவார் மற்றும் 75 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதனால், அந்நியச் செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் அவரது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்ட சொத்துகளில் நிலம், கட்டிடம், இயந்திரங்கள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் குரு கமாடிடி சர்வீசஸ் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ஸ்பார்க்ளிங் மண் பரிசோதனை நிறுவனம் ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலையில் மிக அதிக அளவிலான பங்குகளைக் கொண்டிருந்தது.

இதில் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி சுநித்ரா பவார் ஆகியோருக்கு அதிக பங்கு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. 2010ல் மொத்தம் ரூ.65.75 கோடிக்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. அதையடுத்து அஜித் பவாரின் ரூ.65 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் இடையே சிறுசிறு கருத்து மோதல்கள் ஏற்பட்டு வரும் நிலையில் இருந்தபோது அமலாக்கத் துறை விசாரணை நடவடிக்கையை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Deputy Chief Minister , Case of fraud in Co-operative Bank; Deputy Chief Minister's Rs 65 crore asset freeze: Enforcement action
× RELATED நம்புங்கள்… நான் முதல்வராவேன்; கர்நாடக துணை முதல்வர் திடீர் பேச்சு