இந்தோனேசியாவிற்கு விரைவில் 40 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்படும்: அமெரிக்க அரசு தகவல் !

வாஷிங்டன்: இந்தோனேசியாவிற்கு விரைவில் 40 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று அமெரிக்க அரசு உறுதியளித்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து 80 லட்சம் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த மாதம் அறிவித்தார். வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக அமெரிக்கா இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடுப்பூசிகள் அதிக அளவில் தயாரிக்கப்படும் நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை கொள்முதல் செய்து பிற நாடுகளுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக ‘கோவேக்ஸ்’ என்ற திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டதால், இந்த திட்டத்தின் மூலம் தடுப்பூசிகளை பகிர்வதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகின் 4-வது அதிக மக்கள் தொகையை கொண்ட நாடான இந்தோனேசியாவில், கடந்த 2 வாரங்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை பதிவான கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 22 லட்சத்தைக் கடந்துள்ளது. இதில் 58,995 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் அங்கு 504 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

இதனையடுத்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை இந்தோனேசிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அங்குள்ள மொத்த மக்கள் தொகையான 27 கோடியில் 18 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

இந்த நிலையில், தற்போது ‘மாடர்னா’ நிறுவனத்தின் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதியை இந்தோனேசிய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் வழங்கியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் நேற்று இந்தோனேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ரெட்ரோ மார்சிடியை தொடர்பு கொண்டு பேசிய போது, விரைவில் இந்தோனேசியாவிற்கு 40 லட்சம் ‘மாடர்னா’ தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

Related Stories:

>