×

பெரணமல்லூர் அருகே செய்யாற்று படுகையில் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்: விவசாயிகள், பொதுமக்கள் வேதனை

பெரணமல்லூர்: பெரணமல்லூர் அருகே செய்யாற்று படுகையில் நடக்கும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதாக விவசாயிகள், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பெரணமல்லூர் அடுத்த கெங்காபுரம், கொழப்பலூர், நாராயணமங்கலம், மேல்சாத்தமங்கலம், ஆவணியாபுரம், நரியம்பாடி, அன்மருதை ஆகிய கிராமங்கள் வழியாக செய்யாற்றுப் படுகை செல்கிறது. இந்த ஆற்றுப் படுகையில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கொள்ளையடிக்கப்பட்டு டிப்பர் லாரிகளுக்கு விற்று லாபம் பார்த்து வருகின்றனர். அவ்வாறு கொள்ளையடிக்கப்படும் மணலை ஓரிடத்தில் பதுக்கி வைத்து வெளியூர்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது.  குறிப்பாக, பெரணமல்லூர் அடுத்த நாராயணமங்கலம் பகுதியில் மணல் கடத்தல் கும்பலால் ஆற்றுப் படுகை பள்ளத்தாக்குகளாக மாறியுள்ளது.

இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக, எங்களது பகுதியில் மாட்டு வண்டி வைத்துள்ள சிலர் இரவு நேரங்களில் செய்யாற்றுப் படுகையில் இருந்து மணலை அள்ளுகின்றனர். பின்னர், அதனை குறிப்பிட்ட சில இடங்களில் பதுக்கி வைக்கின்றனர். தொடர்ந்து, அங்கு வரும் டிப்பர் லாரிகள் மூலம் சேத்துப்பட்டு உட்பட வெளியூர்களுக்கு மணலை விற்று லாபம் பார்த்து வருகின்றனர். இங்கு கிராமங்களில் வீடு கட்டும் மக்கள் மணலை கேட்டால்கூட கொடுப்பதில்லை. இந்நிலையில், மணல் கொள்ளையால் ஆற்றுப் படுகையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வருவது தற்போது நின்றுள்ளது. ஏரியில் அமைக்கப்பட்ட திறந்தவெளி கிணறு மூலம் மட்டுமே எங்களது பகுதிக்கு குடிநீர் கிடைத்து வருகிறது.  

மேலும், மணல் கொள்ளை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருக்கின்றனர். மாமுல் உரிய நேரத்தில் சென்று விடுவதால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இதனால், மணல் கொள்ளையை தடுக்க எங்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை. மேலும், புகார் தெரிவிக்கும் நபர்கள் வீட்டுக்கு சென்று மணல் கொள்ளையர்கள் மிரட்டுவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதுடன், தண்ணீரின்றி விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெரணமல்லூர் பகுதிகளில் மணல் வளத்தை காத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Peramallur , Risk of groundwater logging due to sand looting near Peranamallur: Farmers, public suffering
× RELATED பெரணமல்லூர் பகுதிகளில் பட்டப்பகலில்...