×

தனியார் பள்ளிகளில் கட்டண வசூல் புகார்: ‘போய் சாகுங்கள்; என்ன செய்யணுமோ செய்யுங்க’: ம.பி மக்களிடம் பாஜக கல்வி அமைச்சர் அடாவடி

போபால்: தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் புகார் கூறிய போது, அவர்களை ‘போய் சாகுங்கள்’ என்று கல்வி அமைச்சர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநில பாஜக பள்ளிக் கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர், போபாலில் உள்ள அதிகாரபூர்வ இல்லத்தில் இருந்த போது, பெற்றோர் சிலர் அவரை சந்தித்தனர். அவர்கள், ‘தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா காலத்தில், தங்களால் அந்த தொகையை செலுத்த முடியாது. கட்டணங்களை குறைத்து வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது ஆவேசமாக பேசிய அமைச்சர் இந்தர் சிங் பர்மர், ‘போய் சாகுங்கள்; நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதைச் செய்யுங்கள்’ என்று கூறினார். இவர், இவ்வாறு பேசிய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.  

இதுகுறித்து பாலாக் மகாசங்கின் தலைவர் கமல் விஸ்வகர்மா கூறுகையில், ‘உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் இருந்தபோதிலும், பல தனியார் பள்ளிகள் பெற்றோரை வரவழைத்து கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன. கல்விக் கட்டணம் தவிர இதர கட்டணங்களை பெற்றோரிடமிருந்து வசூலிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் பள்ளிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல பெற்றோர்கள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து அரசிடம் புகார் அளித்து வருகின்றனர். கொரோனா காலத்தில் பல பெற்றோர்கள் வேலையை இழந்தனர். ஆனால் பல தனியார் பள்ளிகள் கட்டண விகிதத்தை குறைக்காததால், பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றார். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் நரேந்திர சலுஜா கூறுகையில், ‘மாநிலத்தில்  உள்ள பல தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதொடர்பாக மக்கள் புகார் அளித்த போது, அவரிடம் கல்வி அமைச்சர் இந்தர் சிங் பர்மர் நடந்து கொண்ட விதம், ஆணவத்தின் உச்சகட்டமாகும். அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். அமைச்சர் மக்களிடம் நடந்து கொண்ட விதம், மாநிலத்தில்  பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


Tags : BJP ,Education Minister ,Adavati , BJP, Minister of Education
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...