×

ஆபாச யுடியூபர் பப்ஜி மதனின் ஜாமின் மனு.: காவல்துறை பதில் அளிக்க சென்னை அமர்வு நீதிமன்றம் ஆணை

சென்னை: ஆபாச யுடியூபர் பப்ஜி மதனின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பப்ஜி என்கிற ஆன்லைன் விளையாட்டு மூலம் யூடியூப் மதன் பிரபலமானார். பப்ஜி மதன் மீது சமீபத்தில், சென்னை புளியந்தோப்பு சைபர் கிரைமில் பலர் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில் பப்ஜி விளையாட்டு மூலம் சிறுவர் சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளார் என்றும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம் பிரிவு போலீஸார் விசாரணைக்கு ஆஜராகும்படி பப்ஜி மதனுக்கு சம்மன் அனுப்பினர்.  

ஆனால் பப்ஜி மதன் போலீசில் ஆஜராகாமல் தலைமறைவானார். அதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரது மனைவி இதில் தொடர்பு இருப்பது தெரிந்து அவரை கைது செய்தனர். பின்னர் தலைமறைவாக இருந்த பப்ஜி மதனை தருமபுரியில் வைத்து காவல்துறையினர் ஜூன் 18-ம் தேதி கைது செய்தனர்.

பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மதனை ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து இந்த வழக்கில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவரது மனைவிக்கு மட்டும் 8 மாத கைக்குழந்தையுடன் இருப்பதை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை; பெண்களுக்கு எதிராக கொடுமைகள் ஏதும் செய்யவில்லை. மேலும் காவல்துறை ஏற்கனவே என்னை காவலில் எடுத்து விசாரித்துள்ளதால் ஜாமீன் தேவை என அவர் தெரிவித்து இருந்தார். இதனை விசாரித்த நீதிபதி செல்வகுமார், திங்கட்கிழமை சென்னை சைபர் கிரைம் போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.


Tags : Jamin ,Pabji Madan ,Court of Session ,Chennai , Porn YouTube Babji Madan's bail petition: Chennai Sessions Court orders police to file reply
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை