×

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் அழிந்து வரும் பனை ஓலைப்பெட்டி தொழில்: பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ளது நாகலாபுரம். இக்கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பரம்பரை பரம்பரையாக பனை ஓலைப்பெட்டி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 250 கிராம், 500 கிராம் மற்றும் ஒரு கிலோ பொருட்களை வைக்கும் அளவிற்கு பனை ஓலை பெட்டிகள் தயாரிக்கின்றனர். நாகலாபுரத்தில் தயாராகும் பனை ஓலைப்பெட்டிகள் விருதுநகர், அருப்புக்கோட்டை, தூத்துக்குடி, கோவில்பட்டி, நெல்லை, சாத்தூர் சிவகாசி, தென்காசி, தருமபுரி, ராமேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, புதுக்கோட்டை என பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக பஸ் போக்குவரத்து நடைபெறாததால், விற்பனையின்றி பனை ஓலைப்பெட்டிகள், வீடுகளிலேயே தேக்கமடைந்துள்ளன. இதனால் போதிய வருமானமின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர்.

இதுகுறித்து தொழிலாளி மணிகண்டன் கூறுகையில், ‘நாகலாபுரம் கிராமத்தில் 3 தலைமுறைகளுக்கு மேலாக ஏராளமானோர் பனை ஓலைப்பெட்டி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். இதற்காக பனை மரத்திற்கு ரூ.500 வீதம் கொடுத்து ஓலையை வெட்டி எடுத்து வருகிறோம். வெட்டுக்கூலி, வாகன வாடகை என மொத்தம் ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. பனை ஓலையை ஒரு வாரம் தண்ணீரில் ஊறவைத்து அதன் பிறகே தேவைக்கேற்ப பனை ஓலையை வெட்டி பெட்டிகளை தயார் செய்கிறோம். முழுக்க முழுக்க கைகளாலேயே குடிசைத்தொழிலாக செய்து வருகிறோம். இந்த தொழிலில் எங்களுக்கு அதிக லாபம் கிடைப்பது இல்லை. காலம் காலமாக செய்து வரும் தொழிலை விட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து பனை ஓலைப்பெட்டி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோம். இருப்பினும் வறுமை காரணமாக பல தொழிலாளர்கள் கூலி தொழிலுக்கு சென்று வர வேண்டிய சூழல் உள்ளது. இந்நிலை நீடித்துக்கொண்டே இருந்தால் பனை ஓலைப்பெட்டி செய்யும் தொழில் காலப்போக்கில் மறைந்து விடும்.

ஊரடங்கு தளர்வில் தற்போது பஸ்கள் இயக்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விற்பனை இல்லாததால் தொழிலுக்கு வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாத சூழல் உள்ளது. குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு அல்லது மேற்படிப்பிற்கு பணம் செலுத்த முடியாத நிலை உள்ளது. கடந்தாண்டு ஊரடங்கின் போது அரசு அதிகாரிகள் வந்து பார்த்து புகைப்படம் எடுத்துச் சென்றனர். அரசிடம் சொல்கிறோம் என்றனர். ஆனால் இதுவரை நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை. எனவே இந்த முறையாவது எங்கள் நிலையை அறிந்து உரிய நிவாரணம் கிடைக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்
மருத்துவம் குணம் கொண்ட பனை ஓலையால்  செய்யப்படும் பெட்டிகளில் வைக்கப்படும் உணவு பொருட்கள் எளிதில் கெட்டுப்  போவதில்லை. இதனால் பயன்படுத்துவோரின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். ஆனால் தற்போது பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்து விட்டதால் பனை ஓலைப்பெட்டி தொழில் நசிவடைந்துள்ளது. எனவே பனை ஓலைப்பெட்டி தொழிலை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் பயன்பாட்டை அதிகரிக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Tags : Nagalapuram ,Vilathikulam , In Nagalapuram near Vilathikulam Endangered palm oil industry: Will action be taken to protect it?
× RELATED சாலையின் நடுவே இருந்த பேரிகார்டு மீது...