×

திம்பம் மலை உச்சியில் கொரோனாவால் கல்வி பாதிக்காமல் இருக்க பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு ஒரு வருடமாக பாடம் நடத்தும் இளைஞர்: பொதுமக்கள் பாராட்டு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் திம்பம் மலை உச்சியில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாடும் வனப் பகுதியின் நடுவே அமைந்துள்ளது காளிதிம்பம் மலை கிராமம். கரடுமுரடான ஜல்லி பெயர்ந்த மண் சாலையில் எந்நேரமும் வனவிலங்குகள் தாக்குமோ என்ற அச்சத்தில் இந்த கிராமத்திற்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. செல்போன் சிக்னல் இல்லாத இந்த மலை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பழங்குடியின மக்கள் பெரும்பாலானோர் கல்வியறிவற்றவர்கள். விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் வன பொருள் சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். பள்ளி இல்லாத இந்த கிராமத்தில் உள்ள மாணவ, மாணவிகள் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தலமலை உண்டு உறைவிட பழங்குடியினர் பள்ளி மற்றும் 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள ஆசனூர் பள்ளிக்கு செல்ல வேண்டும்.

இந்த கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி (33) என்ற இளைஞர் அரசு பள்ளியில் படித்து புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  இந்த பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இளைஞர் சத்தியமூர்த்தி. படித்து முடித்துவிட்டு பணிக்காக சத்தியமூர்த்தி காத்திருக்கிறார்.இந்நிலையில் கொரோனாவால்  காளி திம்பம் கிராமத்தில் உள்ள  மாணவர்கள் பள்ளி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆன்லைனில் பாடம் கற்க செல்போன் சிக்னலும் இல்லை. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த சத்தியமூர்த்தி தனது மனைவி சவுமியவுடன்  இணைந்து அங்குள்ள அங்கன்வாடி மையத்தை தற்காலிக பள்ளியாக மாற்றினார். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும்  சுமார் 25 மாணவ, மாணவிகளுக்கு சமூக இடைவெளியுடன் கடந்த ஒரு வருடமாக பாடம் நடத்தி வருகிறார்.

இது குறித்து சத்தியமூர்த்தி கூறும்போது, ‘‘பழங்குடியின மாணவர்களின் பள்ளி இடைநிற்றலை தவிர்க்க வேண்டும்.  மாணவர்கள் கல்வி குறித்த புரிதல் உணர்வு குறைவாக இருந்ததால் மாணவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களை தினமும் நடத்தி வருகிறேன்’’என்றார். பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு தற்காலிகமாக பள்ளி அமைத்து பாடம் நடத்தி வரும் முனைவர் சத்தியமூர்த்திக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tags : Thimbam hill , To avoid education being affected by the corona at the top of Thimphu Hill Indigenous students, youth who have been teaching students for a year: Public praise
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு