77 நாட்களுக்கு பின் நாகை, தஞ்சை, புதுகை மீனவர்கள் கடலுக்கு சென்றனர்

திருச்சி: 77 நாட்களுக்கு பின் நாகை, தஞ்சை, புதுக்கோட்டையை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர்.தமிழகத்தில் மீன்களின் இனபெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் விசைப்படகு மற்றும் இழுவை படகு, இழுவலை மூலம் மீன் பிடிக்கும் மீனவர்கள் 5 லட்சம் பேர் கடலுக்கு செல்லவில்லை. 20ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டன. இதனால் மீன்பிடி சார்ந்த 10லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தடை காலத்தில் வலைகள், படகுகளில் இன்ஜின்கள் பழுது நீக்கம் செய்யும் பணி, வர்ணம் பூசும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். கொரோனா ஊரடங்கால் விசைப்படகுகளுக்கு தேவையான உதிரி பாகங்கள், பெயின்ட் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் தங்களின் விசைப்படகுகளை முறையாக பழுதுநீக்கி பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டனர். தடை காலத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசு ரூ.5,000 நிவாரணம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் கடந்த 14ம் தேதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வந்தது. வழக்கமாக தடைகாலம் முடியும் அன்றே நள்ளிரவு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு தடைகாலம் முடிந்தாலும், கொரோனா தொற்று பரவல், விசைப்படகுகள் பழுது நீக்கப்படாதது, டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால் கடலுக்கு செல்வதில்லை என்றும், ஜூன் 30ம் தேதி முதல் கடலுக்கு செல்வதென நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, நாகை மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடல் செல்வதால் மீன்கள் அதிக அளவில் கிடைக்க வேண்டும் என்று தங்களது படகுகளுக்கு பூஜை போட்டனர். பின்னர் மீனவர்கள் டீசல், தண்ணீர், ஐஸ்கட்டிகள், சமையலுக்கு தேவையான உணவு பொருட்கள், பாத்திரங்கள் ஆகியவற்றை 500 விசைப்படகுகளில் ஏற்றிக் கொண்டு நேற்று மதியம் புறப்பட்டு சென்றனர்.இதே போல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 146 விசைப்படகுகளில் 1,500 மீனவர்கள் நேற்று நள்ளிரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்றதால் மீனவர்கள், தொழிலாளர்கள் என மீன்பிடி தொழில் சார்ந்த 10 ஆயிரம் பேர் பயனடைவர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

Related Stories:

More