×

வேலூர் அருகே குருமலையில் சாலை வசதியில்லாததால் 2 கி.மீ. தூரத்திற்கு டோலி கட்டி தூக்கி வரப்பட்ட கர்ப்பிணி: ஆட்டோவில் ஆண் குழந்தை பிறந்தது

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா ஊசூர் அருகே குருமலை, நச்சிமேடு, வெள்ளக்கல் மலை உள்ளிட்ட 3 மலை கிராமங்கள், குக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசித்து வரும் மக்கள் இதுவரை தார்சாலை வசதியில்லாமல் அடிவாரத்திற்கு வரவும், மீண்டும் மலைக்கு செல்லவும் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நச்சிமேடு மலை கிராமத்தை சேர்ந்த பவுனு (37) ஏற்கனவே இரு ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருந்தார். நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென பிரவச வலி ஏற்பட்டுள்ளது. மலை கிராம மக்கள் பிரசவம் பார்க்க முயன்றுள்ளனர். ஆனால் நேற்று காலை வரை பிரசவிக்க முடியாமல் வலியில் அவர் அலறியதால், அடிவாரத்தில் உள்ள ஊசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

இதற்காக கரடுமுரடான சாலையில் குருமலையில் இருந்து 2 கி.மீ. தூரத்திற்கு கர்ப்பிணியை உறவினர்களே டோலி கட்டி தோள் மீது சுமந்தபடி தூக்கி வந்தனர். மலையடிவாரத்தில் இருந்து ஆட்டோ மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் அவருக்கு ஆட்டோவிலேயே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், மலைஅடிவாரத்தில் மண் சாலையில் காத்திருந்த ஆம்புலன்சில் தாய் மற்றும் சேய்க்கு மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, ஊசூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, குருமலை மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘அடிவாரத்தில் இருந்து குருமலைக்கு தார்சாலை அமைக்க ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. இருப்பினும் தார்சாலை போடவில்லை. தார்சாலை போடுவதற்காக ஜல்லி கொட்டி அப்படியே அரைகுறையாக விட்டுவிட்டனர். இனியாவது எங்களுக்கு தார் சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்’ என்றனர்.

Tags : Kurukaluru ,Vallur ,Dolly , Due to lack of road facilities in Kurumalai near Vellore 2 km. Pregnant with Dolly tied up in the distance: Baby boy born in auto
× RELATED இரவின் கண்கள் விமர்சனம்