×

கொரோனாவில் இறந்ததாக கூறி நாடகம் போலி ஆவணம் தயாரித்து விற்ற குழந்தை மீட்பு: மதுரை காப்பகத்திற்கு சீல் வைப்பு; 16 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிப்பு

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே சேக்கிபட்டியை சேர்ந்த சோனைமுத்து மனைவி ஐஸ்வர்யா (23). லேசான மனநலம் பாதிப்பு உள்ளவர். ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். கணவர் இறந்து, ஆதரவற்ற நிலையில் இருந்த இவரை சமூக ஆர்வலர் அசாருதீன், மதுரை ரிசர்வ் லைனில் உள்ள ‘இதயம் டிரஸ்ட்’ என்ற முதியோர் காப்பகத்தில் கடந்த மார்ச் 20ம் தேதி சேர்த்துள்ளார். இந்த காப்பகத்தை அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் நடத்தி வருகிறார். ஐஸ்வர்யாவின் மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு திடீரென உடல்நலம் பாதித்தது. நரிமேடு நகர்ப்புற சுகாதார நிலையத்தில் கடந்த 13ம் தேதி பரிசோதனை செய்ததில், குழந்தைக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாகவும், குழந்தையை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் காப்பகத்திலிருந்து, அசாருதீனுக்கு தெரிவிக்கப்பட்டது.

திடீரென நேற்று முன்தினம் கொரோனாவால் குழந்தை உயிரிழந்ததாகவும், தத்தனேரி மயானத்தில் மாநகராட்சியினரே அடக்கம் செய்ததாகவும் கூறப்பட்டது. மேலும், தத்தனேரி மயான ஆவணங்கள், புதைக்கப்பட்ட இடத்தில் தாய் ஐஸ்வர்யாவை அழைத்துச் சென்று இறுதிச் சடங்குகள் நடத்திய படங்களையும் சமூக ஆர்வலருக்கு காப்பகத்தினர் அனுப்பி வைத்தனர். இதையடுத்து அசாருதீன், ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாக மதுரை கலெக்டர் அனீஷ் சேகரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து குழந்தை நல அலுவலர், தாசில்தார், போலீசார் இதுதொடர்பான விசாரணையை முடுக்கி விட்டனர். விடிய விடிய காப்பகத்தில் விசாரணை நடத்தப்பட்டது. குழந்தை மாயமானதாக அசாருதீன் புகாரில் தல்லாகுளம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். இதன்பேரில் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட மதுரை தத்தனேரி மயானத்தில், அதிகாரிகள் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்ததில், கொரோனா பாதித்து இறந்த குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில்  இரு நாட்களுக்கு முன்பாக மதுரை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மற்றொரு பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்டிருக்கிறது. பொய்யாக இந்த இடத்திற்கு குழந்தையின் தாய் ஐஸ்வர்யாவை, காப்பகத்தினர் அழைத்து வந்து, இறுதிச் சடங்கு செய்ய வைத்து, அனைவரையும் நம்ப வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்றிரவு மதுரை இஸ்மாயில்புரத்தில் ஒரு தம்பதியிடம் இருந்த குழந்தை மாணிக்கத்தையும், கல்மேடு பகுதியில் இருந்த 2 வயதான மேலும் ஒரு பெண் குழந்தை தீபாவையும் மீட்டனர். மதுரை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட ரசீது எண் போலி எனத் தெரிய வந்தது. அதே ரசீது எண்ணில் ஏற்கனவே கடந்த மே மாதம் 75 வயதான இதே காப்பகத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தத்தனேரி மயான ஊழியர்கள், நரிமேடு நகர்ப்புற மருத்துவமனை போன்ற இடங்களிலும் விசாரிக்கப்பட்டது.

இதில், தத்தனேரி மற்றும் நகர்புற மருத்துவமனை பெயரில் போலியான ஆவணங்கள் உருவாக்கப்பட்டு குழந்தையை புதைத்தது போல காட்டியுள்ளனர். காப்பகத்தில் உள்ள ஆவணங்களை சோதனை செய்ததில், இங்கு 16 குழந்தைகள் இருந்ததும், தற்போது இக்குழந்தைகள் மாயமாகி இருக்கும் அதிர்ச்சித் தகவலும் வெளிவந்தது. இந்த குழந்தைகள் உடலுறுப்புகளுக்காக விற்கப்பட்டு, கடத்தப்பட்டதா அல்லது குழந்தைகள் இல்லாதவர்களுக்கு இந்த காப்பகம் மூலம் விற்கப்பட்டதா என்ற நிலையில் தனிப்படை விசாரணையை தீவிரப்படுத்தியது.

இந்நிலையில், காப்பகத்தில் இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதேவி என்ற பெண்ணிடம் விசாரித்ததில், அவரது 2 வயது பெண் குழந்தை தீபா மாயமாகி இருந்தது தெரிந்தது. அங்கிருந்தவர்களிடம் தொடர்ந்த விசாரணையில், ரூ.5 லட்சம் வரை விலை பேசி குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என்ற தகவல் தெரிந்தது. இதைத்தொடர்ந்து 2 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். புகாருக்கு உள்ளான காப்பக பொறுப்பாளர் சிவகுமார் மற்றும் இங்கிருந்த கலைவாணி, மாதர்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். இவர்களை தேடி 2 தனிப்படை விரைந்துள்ளன’’ என்றார்.

காப்பகத்திற்கு சீல்: மதுரை ரிசர்வ்லைனில் உள்ள காப்பகத்தில் இருந்தவர்களில் 90 பேர் வேறு காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். மேலும் 26 பேர் உடல்நலமின்றி இருந்ததால், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்றிரவு கலெக்டர் உத்தரவில் இந்த காப்பகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

* யார் இந்த சிவகுமார்?
சிவா என்றழைக்கப்படும் சிவகுமார் சாதாரண போட்டோகிராபராக பணியை துவக்கினார். செஞ்சிலுவைச் சங்க ஈடுபாட்டில் சாலையோரம் கிடப்போரை மீட்பது உள்ளிட்ட பணிகளில் கூடுதல் அக்கறை காட்டிய நிலையில், நகரில் ரோட்டில் முதியோர் கிடந்தாலே இவரையே மீட்புக்கென கட்டாயம் அழைக்கத் தொடங்கினர். பலரும் இவரது செயல்மீது அபிமானம் கொண்டு, உதவிகளும் தொடர்ந்தனர். இதன் எதிரொலியாக அரசு விருதுகளும், தனியார் பாராட்டுகளும் குவிந்தன. இதைத்தொடர்ந்து, மதுரை ரிசர்வ்லைனில் முதியோருக்கென காப்பகம் துவங்கினார். மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பஸ்நிலையத்திலும் இவரது முதியோர் மீட்புக்கென தனி அலுவலகத்தை போலீஸ், மாநகராட்சி நிர்வாகங்கள் ஒதுக்கித்தந்து உற்சாகப்படுத்தின. வறுமை நிலையில் இருந்த இவரிடம் தற்போது 3 கார்கள், மூன்றுமாவடியில் ரூ.40 லட்சத்திற்கு வீடு என குறுகிய காலத்தில் வசதி அதிகரித்திருக்கிறது.

Tags : Corona , Child rescued after selling fake document claiming to be dead in Corona: Seal to Madurai archive; The magical discovery of 16 children
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...