×

தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனையாகாமல் தேக்கம் அரசுக்கு ரூ.12 கோடி இழப்பு: அதிமுக ஆட்சியின் நடவடிக்கை குளறுபடி

சென்னை: அதிமுக ஆட்சியின் தவறான நடவடிக்கையால் தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் விற்பனை ஆகாத நிலையில் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017ல் மணல் குவாரிகள் குறைந்த அளவே செயல்பட்டதால்  கட்டுமான பணிகளுக்கான மணல் இல்லாமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதை தொடர்ந்து புதுக்கோட்டையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து 55 ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. தொடர்ந்து இந்த மணலை கட்டுமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது.

ஆனால், தமிழக அரசு சார்பில் தனியார் நேரடியாக மணல் விற்பனை செய்ய தடை விதித்தது மட்டுமின்றி அவசர, அவசரமாக மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று உத்தரவிட்டு வழிகாட்டி நெறிமுறை ஒன்றையும் வெளியிட்டது. இதை எதிர்த்து  மணல் இறக்குமதி செய்த தனியார் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அப்போது, ரூ.7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 மதிப்பில் அந்த மணலுக்கு ரூ.15 லட்சத்து 4 ஆயிரத்து 96 சுங்க வரியும் செலுத்தப்பட்டது. எனவே, இந்த மணலை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் அரசு பெற்றுக்கொண்டு அதற்கான உரிய தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ரூ.12 கோடியை சுப்ரீம் கோர்ட்டில் செலுத்தி மணலை பெற்றுக்கொண்டனர். கடந்த 2018 முதல் தூத்துக்குடி துறைமுகத்தில் வைத்து மணல் விற்பனையையும் தொடங்கினர். ஆனால், இந்த மணல் விலை ரூ.9990 ஆக நிர்ணயம் செய்யப்பட்டன. அதே நேரத்தில் அரசு மணல் விலை 2 யூனிட் ரூ.1300 தான். இதனால், தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாங்க யாரும் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக, 75 சதவீதம் மணல் தற்போது வரை விற்பனை ஆகவில்லை. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக மணல் வைக்கப்பட்டதால் அதற்கு அரசு சார்பில் ரூ.70 லட்சம் துறைமுகத்துக்கு வாடகை கட்டணம் தர வேண்டியுள்ளது. இந்த நிலையில் அதிமுக ஆட்சியின் தவறான முடிவால் மணல் விற்பனை ஆகாத நிலையிலும், வாடகை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : AIADMK ,Thoothukudi , AIADMK loses Rs 12 crore due to non-sale of imported sand at Thoothukudi port
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...