×

ஜிஎஸ்டி 4 ஆண்டு நிறைவு 66 கோடி கணக்கு தாக்கல்: நிதி அமைச்சகம் பெருமிதம்

புதுடெல்லி:  கடந்த 4 ஆண்டுகளில் 66 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சகம் பெருமிதம் தெரிவித்துள்ளது. கலால் வரி, சேவை வரி, வாட் போன்ற 17 உள்ளூர் வரிகளையும், 13 செஸ் வரிகளையும் ஒன்றாக்கி நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை கொண்டு வரும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன.

இதனை கொண்டாடும் வகையில் ஒன்றிய நிதி அமைச்சகம் தனது டிவிட்டர் கணக்கில் ‘ஜிஎஸ்டியின் 4 ஆண்டுகள்’ என்ற ஹேஷ்டேக்கை வெளியிட்டது. இதில், கடந்த 4 ஆண்டில் 66 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது. மேலும், ‘ஜிஎஸ்டி மிகவும் சிக்கலான மறைமுக வரி முறையை குறைத்து விட்டது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில் செய்ய விரும்பும் ஒரு நிறுவனம் 495 வெவ்வேறு சமர்ப்பிப்புகளைச் செய்ய வேண்டியிருந்தது. ஜிஎஸ்டியின் கீழ், அந்த எண்ணிக்கை வெறும் 12 ஆக குறைந்து தொழில் தொடங்குதல் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது,’ என்றும் அது கூறியுள்ளது.

* வரிச்சுமையை குறைத்துள்ளது
பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘இந்திய பொருளாதார அமைப்பில் ஜிஎஸ்டி ஒரு மைல்கல். இது சாதாரண மக்களின் வரிச்சுமையை குறைத்து, வெளிப்படைத்தன்மையை அதிகரித்துள்ளது,’ என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags : Ministry of Finance , GST 4 year completion 66 crore account filed: Ministry of Finance proud
× RELATED டெல்லியில் ஒன்றிய அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து!!