×

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் ஆய்வு: விரைவில் தூர்வாரும் பணி

ஒட்டன்சத்திரம்: தூர்வாரும் பணியை தொடங்குவதற்காக ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார். ஒட்டன்சத்திரம் வன பகுதிக்குச் சொந்தமான வடகாடு மலை பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த உயரம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 197.95 மில்லியன் கன அடியாகும். பரப்பலாறு அணையின் மூலம் தாசரிபட்டி முத்துபூபாலசமுத்திரம், விருப்பாட்சி பெருமாள்குளம், தங்கச்சியம்மாபட்டி சடையகுளம், ஓடைப்பட்டி செங்குளம், வெரியப்பூர் ராமசமுத்திரம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகிய ஆறு குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் 2034 ஏக்கர் நிலங்களும், கரூர் மாவட்டத்தில் 289 ஏக்கர் நிலங்களும் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பரப்பலாறு அணை உள்ளது.

இந்த அணை கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் இருந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பரப்பலாறு அணை தூர்வாரப்படும் என சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்திருந்தார். ஆனால் கடந்த ஆட்சியாளர்கள் இந்த அணையை தூர்வாராமல் கிடப்பில் போட்டிருந்தனர். இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தனது தேர்தல் அறிக்கையில் பரப்பலாறு அணை தூர்வாரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். நேற்று அமைச்சரின் உத்தரவின் பேரில், கலெக்டர் விசாகன் பரப்பலாறு அணை பகுதிகளை தூர்வாருவதற்கான ஆயத்தப்பணிகளை ஆய்வு செய்தார். இதில் செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் விஜயமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : Patriot Dam , Exploration of the Ottansathram area dam: soon dredging work
× RELATED கால்நடைகளுக்கு உணவு கொடுக்க...