×

சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் இரண்டு ரகசிய லேப்டாப் பறிமுதல்

திருப்போரூர்: சிவசங்கர் பாபா ஆசிரமத்தில் நடத்திய  சோதனையில்  2 ரகசிய லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை கேளம்பாக்கத்தில் பிரபல டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு படித்த மாணவிகளுக்கு சாமியார் சிவசங்கர் பாபா, பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் வந்தன. அதன்பேரில் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபா, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். பின்னர்,  செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில்,  அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 4 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தவேளையில், சிவசங்கர் பாபாவிடம் விசாரணை நடத்துவற்கு, அவரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து, கடந்த நேற்று முன்தினம் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.  தொடர்ந்து, 2ம் நாளான நேற்று சிபிசிஐடி போலீசார் கேளம்பாக்கத்தில் உள்ள ராமராஜ்யம் ஆசிரமத்துக்கு சிவசங்கர பாபாவை அழைத்து வந்தனர். சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர், ஆசிரம வளாகத்தில் உள்ள அவரது தனி சொகுசு அறைக்கு அழைத்து சென்று, அங்கு மாணவிகள் அவரிடம் ஆசி வாங்க அழைத்து வரப்பட்டது எப்படி, எந்த அறையில் வைத்து அவர் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். மாணவிகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோ ஆகியவற்றை எந்த கணினியில் பதிவேற்றப்பட்டது என்று கேட்டறிந்தனர்.

காலை 11.10 மணிக்கு ஆசிரமத்தின் உள்ளே சென்ற போலீசார் மதியம் 1.10 மணிக்கு வெளியே வந்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த போலீசார், ஆசிரமத்தில் இருந்த 2 பேரை விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகம் அழைத்து சென்றனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, சிவசங்கர் பாபாவின் ரகசிய லேப்டாப்  பாஸ்வேர்டு மற்றும் இயக்குவது குறித்து அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால் அவர்களை அழைத்து செல்வதாக கூறினர். சுமார் 2 மணிநேர சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகு மீண்டும் சிவசங்கர் பாபாவை போலீசார் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.

கண்ணீர்விட்ட பக்தர்கள்
சிவசங்கர் பாபா அழைத்து வரப்படுவதை அறிந்ததும், அப்பகுதி பழனி கார்டன், கல்கி கார்டன், ராமராஜ்யம் குடியிருப்பு ஆகியவற்றில் வசிக்கும் அவரது பக்தர்கள் திரண்டு வந்தனர். சிவசங்கர் பாபாவின் வாகனம் வந்ததும், அவரைப் பார்த்ததும் சங்கரம் சிவ சங்கரம் என கோஷமிடனர். மேலும் இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கி வைத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதே நேரத்தில், சிவசங்கர் பாபாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்கள் செருப்பு மற்றும் துடைப்பத்துடன் வந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து கேளம்பாக்கம் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Sivashankar ,Baba ,Ashram , Two secret laptops seized at Sivashankar Baba Ashram
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது