×

25 ஆண்டுக்கு முன் புயலை கிளப்பிய ஹவாலா ஊழல் விவகாரம்: 115 குற்றவாளிகளில் மே.வங்க ஆளுநர் பெயர் உள்ளதா? மம்தா பற்றவைத்த புகாரால் தூசி தட்டப்படும் வழக்கு

கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் ஒரு ஹவாலா ஊழல் குற்றவாளி என்றும், அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் உள்ளதாகவும், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். மேற்குவங்க பேரவை தேர்தலுக்கு முன்னும், தற்போதும் அம்மாநில ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும், மாநில முதல்வரும், திரிணாமுல் தலைவருமான மம்தாவுக்கும் இடையே நிர்வாக ரீதியாக பல மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மாநிலத்தில் வன்முறையைத் தடுக்க முதல்வர் மம்தா எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று, ஆளுநர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அவரது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளால் கோபமடைந்த மம்தா, மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை தவிர்க்குமாறு ஆளுநர் ஜகதீப் தங்கருக்கு 14 பக்க பரபரப்பு கடிதத்தை எழுதினார்.

இவ்வாறாக இருவருக்கும் முட்டல் மோதல்கள் நடந்து வரும்நிலையில், தற்போது ஆளுநர் ஜகதீப் தங்கர் மீது மிகப் பெரிய குற்றச்சாட்டை மம்தா முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘ஆளுநர் ஜகதீப் தங்கர் ஊழல் குற்றவாளி. கடந்த 1996ல் நடந்த ஜெயின் ஹவாலா மோசடி வழக்கின் குற்றப்பத்திரிகையில் ஜகதீப் தங்கரின் பெயரும் உள்ளது’ என்றார். இதற்கு பதிலளித்த ஆளுநர் ஜகதீப் தங்கர், ‘எந்த குற்றப்பத்திரிகையிலும் என்னுடைய பெயர் இல்லை. தவறான, பொய்யான குற்றச்சாட்டை மம்தா முன்வைக்கிறார். இதை நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ல் நடந்த பாஜக ஆட்சிக்காலத்தில், பிரபல ஹவாலா முகவர்கள், ஜெயின் சகோதரர்கள் மூலம் சுமார் ரூ.1,000 கோடியை இந்திய அரசியல்வாதிகளுக்கு, ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விவகாரத்தில், பாஜக மூத்த தலைவர் அத்வானி, சுக்லா, ஷிவ் சங்கர், ஷரத் யாதவ், பல்ராம் ஜாக்கர், மதன் லால் குரானா உள்பட பலர்மீது குற்றம் சாட்டப்பட்டது. போதுமான ஆதாரங்கள் இல்லாததால், இவ்வழக்கில் யாருக்கும் தண்டனை வழங்கப்படவில்லை.

இவ்வழக்கில், 115 தலைவர்கள், வர்த்தகர்கள், அதிகாரிகள் போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கும், அதே முறையில் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறப்பட்டதும் தெரியவந்தது. வழக்கு விசாரணையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், 115 பேரும் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மம்தா, ஆளுநருக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் 115 பேரில் ஜகதீப் தங்கரும் ஒருவரா? என்று பழைய வழக்கு விபரங்களை அரசியல் நோக்கர்கள் தூசிதட்டி வருகின்றனர். இதனால், மேற்குவங்க அரசியலில் ஆளுநருக்கு எதிரான ஹவாலா விவகாரம் புதிய புயலை கிளப்பி உள்ளது.

Tags : Havala ,Governor of Bengal , Hawala scandal 25 years ago The case of Mamta being dusted off by a welding complaint
× RELATED டெல்லி சமூகநலத்துறை அமைச்சர்...