×

தனியார் நிலங்கள் கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசின் நில ஆர்ஜித சட்டம் செல்லும்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: அரசின் திட்டத்திற்காக தனியார் நிலங்களை கையகப்படுத்துதல் தொடர்பாக தமிழக அரசு கடந்த 2019ல் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. அதனால், தமிழக அரசு கொண்டு வந்த நில ஆர்ஜித சட்டம் செல்லுபடியாகும். கடந்த 2013ல் மத்திய அரசின் சார்பில், அரசுத் திட்டங்களுக்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்த, நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தப் புதிய சட்டத்தின் தொடர்ச்சியாக மாநில அரசின் நில கையகப்படுத்தும் சட்டங்களான, மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டுக்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் ஹரிஜன் நல சட்டம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில் கடந்த 2015ல் தமிழக அரசு  105(ஏ) என்ற சட்டப் பிரிவை சேர்த்து புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மாநில அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் - 2015யை உயர்நீதிமன்றம் ரத்து செய்த உத்தரவுக்கு எந்த இடைக்காலத் தடையும் விதிக்க முடியாது. ஏற்கனவே மாநிலத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் தற்போது நடைபெறும் திட்டங்கள் தொடர்ந்து நடக்க அனுமதி வழங்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து மேற்கண்ட சட்டப்பிரிவில் சிறிய திருத்தம் செய்த தமிழக அரசு 2019ம் ஆண்டு நில ஆர்ஜித சட்டம் என்று குறிப்பிட்டு மீண்டும் நிலம் கையகப்படுத்துதலை மேற்கொள்ள முன்வந்தது.

ஆனால், இதனை எதிர்த்து திருவள்ளூரை சேர்ந்த சொக்கப்பன் உள்ளிட்ட 55 விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவுற்ற நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வு இன்று அளித்த தீர்ப்பில், ‘நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரத்தில் சொக்கப்பன் உட்பட 55 விவசாயிகள் தொடர்ந்த அனைத்து ரிட் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என்று உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் மூலம், 2019ல் தமிழக அரசு கொண்டு வந்த நில ஆர்ஜித சட்ட திருத்தம் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : The Land Acquisition Act of the State of Tamil Nadu will go on in connection with the acquisition of private lands: Supreme Court action judgment
× RELATED இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான...