×

திருப்போரூர் ஒன்றியத்தில் 656 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ. அன்பரசன் வழங்கினார்

திருப்போரூர்:  தமிழ்நாடு மாநில் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கிராமப்புற மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கும் விழா நேற்று திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் தர் வரவேற்றார். திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.எஸ். பாலாஜி முன்னிலை வகித்தார்.  தமிழ்நாடு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு கிராமப்புற மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 280 பயனாளிகளுக்கு 1 கோடியே 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு 6 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 321 பயனாளிகளுக்கு 30 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கி பேசினார்.

 மேலும், உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் மாம்பாக்கம், நாவலூர் ஊராட்சிகளில் சாலை அமைக்க தலா 2 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு ஆணைகளையும், 5 ஊராட்சிக செயலர்களிடம் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கள நீர் தரப்பரிசோதனை பெட்டிகளையும் வழங்கினார்.   மொத்தம் இந்த நிகழ்ச்சியில் மட்டும் 656 பயனாளிகளுக்கு ₹1 கோடியே 49 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ஆனந்தன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மாவட்ட அலுவலர் லலிதா, திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ராகவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பஞ்சு, முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மன், தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பையனூர் சேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் இராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வ குமார், விடுதலை நெஞ்சன், நகர தி.மு.க. செயலாளர் தேவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க மாவட்ட செயல் அலுவலர் தினகரன் ராஜ்குமார் நன்றி கூறினார்.



Tags : Thiruporur ,Union ,Minister Thamo ,Anbarasan , Welfare assistance to 656 beneficiaries in Thiruporur Union: Minister Thamo. Presented by Anbarasan
× RELATED செங்கை கலெக்டர் துவக்கி வைத்தார்;...