டிவிட்டரின் அதிகாரபூர்வ இந்திய வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர், லடாக் பகுதிகள் இல்லை!: நெட்டிசன்கள் கொந்தளிப்பு..!!

டெல்லி: டிவிட்டர் அதிகாரபூர்வ வரைபடத்தில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகள் இந்தியாவில் இடம்பெறாதது சர்ச்சையாகியுள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் தவறான செய்திகளும், இந்திய இறையாண்மைக்கு எதிரான தகவல்களும் பரப்பப்படுவதை தவிர்க்கும் பொருட்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021ஐ ஒன்றிய அரசு கொண்டுவந்தது. 

புதிய விதிகளின்படி இத்தளங்களில் எழும் புகார்களை விசாரிக்க இந்திய அளவில் ஒரு குறைதீர் அதிகாரியை நியமித்தல், அலுவலகம் போன்றவற்றை ஏற்படுத்தி அதன் விவரங்களை ஒன்றிய அரசுடன் பகிர வேண்டும் என காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. இதில் முதலில் ஒன்றிய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்த  ட்விட்டர், பின்னர் புதிய சட்டவிதிகளை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தது. இந்நிலையில், டிவிட்டரின் அதிகாரபூர்வ இணையதளத்தில் இந்திய வரைபடம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

அதில் ஜம்மு காஷ்மீர் தனி நாடு போன்றும் லடாக் சீனாவின் எல்லைக்கு உட்பட்டு இருப்பது போன்றும் வரைபடம் இடம்பெற்றுள்ளது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதால் ட்விட்டர் நிறுவனம் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனிடையே காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை தலைவராக கொண்டுள்ள நாடாளுமன்ற நிலைக்குழு கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

அதில் ஃபேஸ்புக் இந்தியா, கூகுள் இந்தியா நிறுவனங்கள் ஜூன் 29ம் தேதி  நடைபெறும் கூட்டத்தில் கலந்துக்கொண்டு சமூக ஊடகங்களில் மக்களின் பாதுகாப்பு உரிமைகள் தொடர்பாகவும், செய்தித்தாள்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது எப்படி என்பது குறித்தும் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஜூன் 18ம் தேதியன்று நாடாளுமன்ற தகவல் தொடர்பு நிலைக்குழு முன்பு ட்விட்டர் நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஆஜராகி கருத்துக்களை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories:

>