×

அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோருவதற்கு மாற்று திறனாளிக்கு உரிமை உள்ளது : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி : கேரளாவில் அரசுப் பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோருவதற்கு மாற்று திறனாளிக்கு உரிமை உள்ளது என தீர்பளித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் அம்மாநில அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.கேரள மாநிலத்தில் 1950 ஆண்டு இடஒதுக்கீடு என்பது அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது முதலாவதாக 45சதவீதம் வழங்கப்பட்டது. இதையடுத்து 1957ம் ஆண்டி அது 50சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 40சதவீதம் இடஒதுக்கீட்டை ஒரே பிரிவாக வழங்கப்பட்டது. இருப்பினும் அதே வகுப்பில் உள்ள பல பிரிவை சார்ந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது தொடர் குற்றச்சாட்டாக தற்போது வரை இருந்து வருகிறது.

இந்த நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், மாநிலத்தில் அரசு பணியில் பதவி உயர்வு வழங்கப்படும் போது மாற்று திறனாளிகளுக்கும் போதிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். மேலும் அதற்கு உரிமை உள்ளது என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த அம்மாநில உயர்நீதிமன்றம், அரசு பணிகளில் மாற்று திறனாளிகளுக்கு இடஒதுக்கீட்டுக்கான உரிமை உள்ளது என உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக கேரள அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும் இடஒதுக்கீட்டில் மாற்று திறனாளிகளுக்கும் உரிமை உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் கேரள உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. இதனை அடுத்த மூன்று மாதங்களில் மாநில அரசு கண்டிப்பாக அமலுக்கு கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், கேரள அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.


Tags : Alternative Talent ,Supreme Court , கேரளா
× RELATED அமலாக்கத்துறையின் கடும்...