×

உலக மக்களை அச்சுறுத்திய தீவிரவாதி ஒசாமா பின்லேடன் தியாகி என இம்ரான் கான் வாய் தவறி கூறிவிட்டார்: பாகிஸ்தான் அமைச்சர் விளக்கம்

இஸ்லாமாபாத்: கடந்த ஆண்டு பயங்கரவாதிகளின் புகலிடம் பாகிஸ்தான் என்று அமெரிக்காவின் அறிக்கை வெளியான அடுத்த தினமே, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானின் அபோட்டாபாத்திற்கு வந்த அமெரிக்கர்கள் அல்கொய்தா தலைவர் தியாகி ஒசாமா பின்லேடனைக் கொன்றனர் என்று பேசியிருந்தார். அமெரிக்க வெளியுறவுத் துறை பாகிஸ்தான் தொடர்பாக புதன்கிழை வெளியிட்ட மதிப்பீடு அறிக்கையில், பாகிஸ்தான் இன்றளவும் பயங்கரவாதிகளின் புகலிடமாக விளங்குகிறது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை குறிவைத்து செயல்படும் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத் அசார் பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பில் இருப்பதாக நம்பப்படுகிறது என கூறியிருந்தது. இந்த அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடாளுமன்றத்தில் பேசுகையில் அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை தியாகி என புகழ்ந்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவிற்கு உதவிய விதத்திற்காக என் நாடு அவமானத்தை சந்திக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான போரை ஆதரித்துவிட்டு, அதற்காக அவர்களிடமிருந்து விமர்சனத்தையும் பெற வேண்டிய நாடு வேறு எதுவும் இருக்க முடியாது. அபோட்டாபாத்தில் ஒசாமா பின்லேடனை அமெரிக்கர்கள் கொன்றனர். அமெரிக்கா நம் நாட்டிற்குள் நுழைந்து நம்மிடம் கூட சொல்லாமல் ஒருவரைக் கொன்றது பெரிய அவமானம் என்று பேசினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி இம்ரான் கானுக்கு கடும் கண்டனத்தை பெற்றுத் தந்துள்ளது. பாகிஸ்தான் எதிர்க்கட்சியினரே இம்ரான் கானை கடுமையாக விமர்சித்தனர்.ஒசாமா பின்லேடன் பிரதமருக்கு வேண்டுமானால் ஹீரோவாக இருக்கலாம். ஆனால் நாட்டு மக்களுக்கு அவர் குற்றவாளி தான்  என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி ஷெர்ரி ரெஹ்மான் கூறினார். பாகிஸ்தான் முஸ்லிம் லீக் மூத்த தலைவர் கவாஜா ஆசிப், “எங்கள் மண்ணிற்கு பயங்கரவாதத்தை கொண்டு வந்தவர் ஒசாமா, அவர் என்றைக்கும் பயங்கரவாதி தான்.” என கண்டித்தார்.

தற்போது இது குறித்து பாகிஸ்தானின் தகவல் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி கூறுகையில், இம்ரான் கான் வாய் தவறியே அவ்வாறு பேசிவிட்டார் எனவே ஒசாமா பின்லேடனை பயங்கரவாதியாகவே பாகிஸ்தான் கருதுகிறது. அல்கொய்தா இயக்கத்தையும் பயங்கரவாத இயக்கமாகவே நாங்கள் கருதுகிறோம்  என்று தெரிவித்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி பாகிஸ்தானின் அபோட்டாபாத்தில் நுழைந்த அமெரிக்கப் படையினர் அங்கு ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதி ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தினர். ஒசாமா பின்லேடன் அந்த பகுதியில் பதுங்கியிருந்தது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று பாகிஸ்தான் திட்டவட்டமாகத் தெரிவித்தது.


Tags : Imran Khan ,Osama bin Laden ,Pakistan , Imran Khan fails to call Osama bin Laden a martyr
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு