×

70 கோடி செலவில் அமைக்கப்படுகிறது 7 தளங்களில் ஏசி வசதியுடன் மதுரையில் கலைஞர் நூலகம்; 6 இடங்களில் ஆய்வு செய்தபின் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

மதுரை: மதுரையில் 70 கோடி மதிப்பீட்டில் 2 லட்சம் சதுரடி பரப்பளவில், நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக மதுரை நகரில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், உலக தமிழ்ச்சங்க வளாகம் அருகில், மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி அருகில், மாநகராட்சி பொது பண்டக சாலை, எல்லீஸ் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சாலை உள்ளிட்ட 6 இடங்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த இடங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.  

 இதனைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டியில், “கலைஞரின் பிறந்த நாளன்று, தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் ₹70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக நானும், அமைச்சர்களும் மதுரை மாட்டுத்தாவணி, எல்லீஸ் நகர் உள்ளிட்ட பல இடங்களை ஆய்வு செய்து சுற்றிப்பார்த்தோம். 2 லட்சம் சதுரடியில் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட 24 பகுதிகளாக, வரலாற்று சிறப்புமிக்கதாக இந்த நூலகம் அமையும்.  ஒரே நேரத்தில் 600 பேர் அமர்ந்து படிக்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது.  முதல்வரிடம் இந்த இடங்களின் சாதக, பாதகங்கள் தெரிவிக்கப்படும். அதன்பின்னர், முதல்வர் எந்த இடம் என முடிவு செய்வார்.

7 தளங்கள் அமைத்து சிறப்பான வரலாற்று சிறப்புமிக்க கட்டிடமாக, கல்லூரி பள்ளி மாணவ மாணவிகள், கல்வியாளர்கள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சிறப்பான வழிகாட்டியாக இந்த நூலகம் அமையும். இடம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும். தமிழ்வளர்த்த மதுரையில், தமிழாக வாழ்ந்த கலைஞருக்கு நூலகம் அமைவது சாலப்பொருத்தமாக இருக்கும்” என்றார்.  தொடர்ந்து, மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, கலெக்டர் அனீஷ்சேகர், எம்எல்ஏக்கள் கோ.தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், தமிழரசி, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரி, மாநகராட்சி துணை கமிஷனர் சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விரைவில் கீழடி அகழ் வைப்பகம்
எ.வ.வேலு கூறுகையில், ‘‘கீழடி 7ம் கட்ட அகழாய்வில் தொன்மையான உலோகப் பொருட்கள் மற்றும் கலைநயம் வாய்ந்த பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை அனைவரும் தெரிந்து கொள்ள கீழடியில் சர்வதேச தரத்துடன் அகழ் வைப்பகம் 39,910 சதுரடியில் 11.33 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த அக்டோபரில்  கட்டிட பணிகள் துவக்கப்பட்டது. இப்பணிகள் மிகவும் தாமதமாக நடப்பதாக முதலமைச்சருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பணிகளை விரைவாக முடிப்பதற்காக ஆய்வு செய்தோம். இலக்கு நிர்ணயித்து பணிகளை விரைவுபடுத்துவோம்’’ என்றார்.

Tags : Madurai ,Minister ,E.V.Velu , Artist library in Madurai with AC facility on 7 sites is being set up at a cost of Rs 70 crore; Minister E.V.Velu informed after inspecting 6 places
× RELATED மதுரை ஆவல் சூரன்பட்டியில் உள்ள உரம்...