×

டாக்டர் காமேஸ்வரன் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன்   தந்தையும், பத்ம விருது பெற்ற புகழ்மிக்க மருத்துவருமான காமேஸ்வரன்  சென்னையில் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 98. அவருடைய உடலுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினர்.
 1923ல்  பிறந்த  மருத்துவர் காமேஸ்வரன் லயோலா கல்லூரியிலும், சென்னை மருத்துவக்   கல்லூரியிலும் பயின்றவர். சென்னை மருத்துவக் கல்லுரியில் காது, மூக்கு,  தொண்டை பிரிவு இயக்குநராக  இருந்தார். நாட்டில் பல்வேறு காது, மூக்கு,  தொண்டை மருத்துவ நிபுணர்களை  உருவாக்கியவர். தரமணியில் உள்ள சென்னை  பல்கலைக்கழகத்தின்  அடிப்படை மருத்துவ அறிவியல் பிரிவின் இயக்குநராகவும்  இருந்தார். டாக்டர் காமேஸ்வரன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த  இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
  புகழ்பெற்ற மருத்துவர்  காமேஸ்வரன் மறைவு செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும்  உள்ளானேன்.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்  கொள்கிறேன். மருத்துவர் காமேஸ்வரன்  தனித்துவமிக்க காது, மூக்கு, தொண்டை  மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர், எண்ணற்ற இளம் மருத்துவர்களை  உருவாக்கியவர். 50 ஆண்டுகளுக்கும் மேல் மக்களுக்கு மருத்துவ சேவை புரிந்து,  தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உலக அரங்கில் நற்பெயர் ஈட்டித் தந்த  பெருமைக்குரியவர். முத்தமிழறிஞர் கலைஞருக்கு  ஈடு இணையற்ற நண்பராக  இருந்தவர். தனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தந்தையை இழந்து வாடும்  காது மூக்குத் தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன், அவரது  குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும், அனுதாபத்தையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Dr. ,Kameswaran ,Chief Minister ,MK Stalin , Dr. Kameswaran's death: Chief Minister MK Stalin's condolences
× RELATED டூர் போறீங்களா?