×

ராணிப்பேட்டையின் வரலாற்று சின்னமாக திகழும் ராஜா தேசிங்கு, ராணிபாயின் நினைவு தூண்கள் சீரமைக்கப்படுமா?-மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள எதிர்பார்ப்பு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டையின் வரலாற்று சின்னமாக திகழும் ராஜா தேசிங்கு மற்றும் ராணிபாயின் நினைவு தூண்களை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். ராணிப்பேட்டையில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மிகப்பெரிய நிறுவனமான பெல் நிறுவனம், 3 சிப்காட் பகுதிகள் உள்ளன. மேலும் இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோல் தொழில் ரசாயனம், இரும்பு, பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த 2020ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

இந்த ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தனி வரலாற்று சிறப்பு உண்டு. அதில் கடந்த 1714ம் ஆண்டு ஆற்காடு நவாபாக இருந்த சாதத்துல்லா கான், 30-10-1714ம் ஆண்டு செஞ்சி மீது போர் தொடுத்ததில் ராஜா தேசிங்கை வீழ்த்தி செஞ்சியை கைப்பற்றினார். ராஜா தேசிங்கு மரணமடைந்த செய்தியை அறிந்த அவரது மனைவி ராணிபாய், உடன் கட்டை ஏறி தன் உயிரை நீத்தார்.

இவர்களின் ஒற்றுமையை அறிந்த ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான், அவர்களின் நினைவாக பாலாற்றங்கரையோரம் பளிங்கு பச்சை கற்களால் ஆன இரு நினைவு சின்னங்களை அமைத்தார்.
மேலும், ராணிபாய் நினைவாக ராணிப்பேட்டை என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஆற்காடு நவாப் சாதத்துல்லா கான், 10 ஆண்டுகள் கழித்து 1724ம் ஆண்டு மரணமடைந்தார். அவரது நினைவாக ஆற்காடு பாலாற்றங்கரையில் பளிங்கு பச்சைக்கற்களால் உருவான நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், ராணிப்பேட்டை நகரத்தில் பெரிய குதிரைப்படை இங்குதான் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. அந்த இடத்தின் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. தற்போது சென்னை- மும்பை தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள அரசினர் சிறுவர் காப்பகம், இருக்கும் இடத்தில் ஆங்கிலேயர்களின் வெடிமருந்து கிடங்காக இயங்கி வந்துள்ளது.  

மேலும் ராணிப்பேட்டையில் உள்ள வார சந்தையில், இரும்பு வேலி அமைக்கப்பட்டு அதில் போர்களில் பிடிக்கப்பட்ட பிணை கைதிகளுக்கு திறந்த வெளிச் சிறையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து வரும் ராணுவத்தினருக்கு உதவியாக மிகப்பெரிய ராணுவ தளம் இங்கு நிலை நிறுத்தப்பட்டிருந்தது. இவ்வளவு சிறப்பு வாயந்த இந்த ராணிப்பேட்டையில் ராஜா தேசிங்கு மற்றும் ராணிபாயின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னங்கள் தற்போது பாழடைந்து புதர் மண்டியும், சமூக விரோத செயல்களும், குடி மகன்களின் கூடாரமாகவும் செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து அப்பகுதியினர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.மேலும், ராணிப்பேட்டை மாவட்டமாக உதயமாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொண்டு ராஜா தேசிங்கு மற்றும் ராணிபாயின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூணை சீரமைத்து சுற்றுலாத்தளமாக அமைக்கவும், அப்பகுதியில் பூங்கா அமைத்து காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Raja ,Desingu ,Ranibai ,Ranipettai , Ranipettai: The district administration has erected monuments to Raja Desingu and Ranibai, the historical monuments of Ranipettai.
× RELATED கோவையில் தனியார் மருத்துவமனைக்குள்...