×

பிளஸ் 2 மாணவர்களின் 10ம் வகுப்பு மதிப்பெண்: இணையதளத்தில் பதிவேற்ற தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவு

சென்னை: 2020-21-ல் +2 தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை சரிபார்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். மேலும் அரசு தேர்வுகள் இயக்குநரகத்தின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அணையிடப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் +2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது குறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம், பிளஸ் டூ தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்கள் ஜூலை 31ஆம் தேதிக்குள் மதிப்பெண்களை வெளியிட உத்தரவிட்டது.

மேலும் 10 நாட்களுக்குள் மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து தெரிவிக்கவும் ஆணையிட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், +2 மாணவர்கள் 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை சரிபார்த்து நாளைமுதல் வருகிற 30ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றவேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. +2 மதிப்பெண் கணக்கீட்டிற்கு தேவைப்படுவதால் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை சரிபார்த்து இணையத்தில் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது. மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநரிடமும் பட்டியலை வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக, ரத்து செய்யப்பட்ட சிபிஎஸ்இ +2 தேர்வு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை கவனித்தபிறகே மாநில அளவிலான +2 பொதுத்தேர்வு மதிப்பெண்களை கணக்கிட முடியும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார். சிபிஎஸ்இ +2 மதிப்பெண்ணானது மாணவர்கள் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் எடுத்திருக்கும் மதிப்பெண்களின் விகிதத்தைக்கொண்டே வழங்கப்படும் என அறிவித்த நிலையில், அதை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் தமிழக அரசும் +2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

Tags : TN Government , 10th class marks of Plus 2 students: Government of Tamil Nadu instructs head teachers to upload on the website
× RELATED பெண்களின் பாதுகாப்புக்கு பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்துகிறது